வன்னேரிக்குளம் பகுதியில் நெற் களஞ்சியசாலை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Tuesday, September 6th, 2016

வன்னேரிக்குளம் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்ற நெல்லினைக் களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய வகையில் போதிய வசதிகளைக் கொண்ட நெற் களஞ்சியசாலை ஒன்றையும், நெல்லினை உலர வைப்பதற்கான தளமொன்றையும் அமைக்க நடவடிக்கை எடுக்க முடியுமா? என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா குறித்த விடயம் தொடர்பாக கிராமிய பொருளாதார அமைச்சர்  பி. ஹரிசன் அவர்களிடம் குறித்த கேள்வியை எழுப்பியிருந்தார்.

மேலும் அவர் இதுதொடர்பில் தெரிவித்துள்ளதாவது –

கிளிநொச்சி மாவட்டத்தில், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வன்னேரிக்குளம் கிராமமானது கிளிநொச்சியிலிருந்து 24 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 1953ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இக் கிராமத்தில் தற்போது 458 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1658 பேர் வாழ்ந்துவரும் நிலையில், இவர்களது பிரதான வாழ்வாதாரமாக விவசாயம் விளங்குகிறது.

இங்கு பிரதான நீர் மூலமாக விளங்குவது மண்டல்கல் ஆற்றுப்படுகையின் கீழ் உருவாக்கப்பட்ட வன்னேரிக்குளம், தேவன்குளம் ஆகியவற்றை ஒன்றிணைத்து கட்டப்பட்ட, 1713 ஏக்கர் அடி நீரைக் கொள்ளளவாகக் கொண்ட வன்னேரிக்குளமாகும். இதன் கீழ் 120 பயனாளிகள் தலா 3 ஏக்கர் வீதம் 360 ஏக்கரில் நெற்பயிர்ச் செய்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி வன்னேரிக்குளத்தை மேலும் அபிவிருத்தி செய்து, அப் பகுதிக்கான உவர் நீர்த் தடுப்பு அணை ஒன்றினையும் நிர்மாணிப்பதன் மூலம், தற்போது உவர் நீர் உட்புகுதல் காரணமாக கைவிடப்பட்டுள்ள சுமார் 1200 ஏக்கரிலும் நெற் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள முடியுமெனத் தெரிய வருகிறது.

இந்த நிலையில், போக்குவரத்து பிரச்சினை காணப்படும் இப் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் நெல்லினை உடனடியாக விற்பனை செய்ய முடியாதுள்ளது. எனவே, உற்பத்தி செய்யப்படும் நெல்லை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கும், உலர வைப்பதற்கும் வசதிகள் இன்மை காரணமாக இப் பகுதி விவசாய மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாகத் தெரிய வருகின்றது.

இக் கிராமத்து விவசாய மக்களுக்கு மேற்படி வசதிகளை செய்து கொடுத்தால், அவர்களால் தங்களது உற்பத்தியை மேலும் பயனுள்ள வகையில் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். இதன் ஊடாக கிராமியப் பொருளாதாரம் மேலும் வளர்ச்சியுற்று, அதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கான சிறந்ததொரு பங்களிப்பினையும் வழங்க முடியும்.

எனவே வன்னேரிக்குளம் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்ற நெல்லினைக் களஞ்சியப் படுத்தி வைக்கக்கூடிய வகையில் போதிய வசதிகளைக் கொண்ட நெற் களஞ்சியசாலை ஒன்றையும், நெல்லினை உலர வைப்பதற்கான தளமொன்றையும் அமைக்க நடவடிக்கை எடுக்க முடியுமா? மேற்படி எனது கேள்விக்கான பதிலையும், எடுக்கப்படவுள்ள நடவடிக்கை தொடர்பான விளக்கத்தையும் கௌரவ அமைச்சர் பி. ஹரிசன் அவர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.

epdp newsss

Related posts:

மருதங்கேணியில் அப்பகுதி சாராதவர்களால் மேற்கொள்ளப்படும் கடற்றொழில் நடவடிக்கைக்கு சட்ட ரீதியிலான அனுமத...
வடக்கில் உப தபாலகங்களுக்கு காணி இருந்தும் கட்டிடங்களை அமைத்துக் கொள்ளமுடியாமல் உள்ளது ஏன் - நாடாளுமன...
அனலை மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய எழுதாரகை அப்புறப்படுத்தப்பட்டது: அமைச்சர் டக்ளஸின் நடவடிககைய...

வடக்கு - கிழக்கில் போதுமான தாதியர்கள் நியமிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!
"எமது மக்களின் எதிர்காலம் சிறப்பானதாக உருவாக்கப்பட வேண்டும் என்பதிலேயே முழுமையாக அக்கறை செலுத்த...
காங்கேசன்துறை சரக்கு படகு சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு இன்று அனுமதி - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவ...