வடபகுதி  போக்குவரத்து சாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, November 29th, 2016

வடக்கு மாகாணத்திலுள்ள பேருந்து சாலைகளில் பல பிரச்சினைகள் மற்றும் தேவைகள் நிலவுகின்றன. அந்த வகையில், யாழ்ப்பாண சாலையை எடுத்துக் கொண்டால் நிரந்தரமாக ஒரு முகாமையாளர் நியமிக்கப்பட வேண்டும்  என்பதுடன் புதிதாக 30 சாரதிகள் மற்றும் 30 காப்பாளர்கள் தேவைப்படுகின்றனர். பதில் கடமை அடிப்படையில் உள்ள பணியாளர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில், புதிதாக மேலும் 10 போருந்துகளாவது தேவைப்படுகின்றன. யாழ் சாலைக்குள் உள்ள வீதிகள் புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. மேலும், நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுவது தொடர்பில் அவதானம் எடுக்கப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் செலவுத் திட்டம் தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு, நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

பருத்தித்துறை, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் காரைநகர் போன்ற ஏனைய சாலைகளுக்கும் தலா 5 புதிய பேரூந்துகள் வீதம் தேவைப்படுவதுடன், தலா 10 சாரதிகள் 10 காப்பாளர்கள் வீதமும் தேவைப்படுகின்றனர்.அத்துடன், யாழ்ப்பாண சாலையில் நிலவும் ஏனைய தேவைகள் மற்றும் பிரச்சினைகளே வடக்கு பிராந்தியத்தின் ஏனைய சாலைகளிலும் காணப்படுகின்றன. எனவே, இவ்விடயங்கள் தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தில் எடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

sri-lanka-parliament-budget-860

Related posts: