வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தவேண்டும்  நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 8th, 2017

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் எமது சுற்றுலாத்துறையினை மேலும் மேம்படுத்தக்கூடிய தேவைகள் காணப்படுகின்றன. இயற்கை வளங்கள் தொல்லியல் அம்சங்கள் மரபுரிமை அம்சங்கள் என்ற மூவிதமான விடயங்கள் தொடர்பில் இதன்போது அவதானமெடுக்க முடியும் என்றே கருதுகின்றேன் — என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைதினம் நடைபெற்ற வரவு செலவு திட்ட குழநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

குறிப்பாக பூநகரி மண்டித்தலை கௌதாரி முனைக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கும் இடைப்பட்ட ஆழம் குன்றிய பரவைக்கடலை சுற்றுலாத் தளமாக மாற்றி சுற்றுலாப் பயணிகளைக் கவரத்தக்க வகையிலான படகுச் சேவைகள் ஆரம்பிக்கப்படல் வேண்டும். மேலும் இப்பகுதியில் வரலாற்றுப் பழைமைவாய்ந்த இந்து ஆலயங்களும் காணப்படுகின்றன.

ஆனையிறவுப் பாதை திறப்பதற்கு முன்பதாக தென் பகுதிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான கடல் தரை வழிப் பாதையானது யாழ்ப்பாணம் – கொழும்புத்துறையிலிருந்து பூநகரி மண்டித்தலை ஊடாக மாந்தோட்டம் சென்று அங்கிருந்து அனுராதபுரம் ஊடாக தென் பகுதி நோக்கியதாக இருந்துள்ளது. இந்த கடற்கரைப் பகுதியானது சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரக்கூடியது. இந்தப் பகுதி குறித்த வர்ணனைகளை ‘கோகுல சந்தேசய’வில் காணலாம்.

புத்தூர் நிலாவறைக் கிணறு வண்ணார்பண்ணை வில்லூன்றி தீர்த்தக் கேணி என்பனவும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய இடங்களாக மேலும் மேம்பாட்டுக்கு உள்ளாக்கப்பட வேண்டிய இடங்களாகும். இராமாயணம் கூறுகின்ற வரலாற்றுடன் தொடர்புடைய இடங்களாக இவை காணப்படுவதாக எமது வரலாற்று பேராசிரியர்கள் கூறுகின்றனர்.

நல்லூர் நகுலேஸ்வரம் மாவிட்டபுரம் பறாளை விநாயகர் வல்லிபுரம் வி~;ணு கோவில் சட்டநாதர் கோவில் வீரமாகாளி அம்மன் கோவில் போன்ற வரலாற்று ஆலயங்களையும் கந்தரோடை மற்றும் நெடுந்தீவுப் பகுதிகளில் காணப்படுகின்ற பௌத்த ஸதூபிகளைக் கொண்ட இடங்களையும்

சாட்டி யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் காணப்படும் பழைமைவாய்ந்த மசூதிகளையும் நல்லூர் மந்திரிமனை சங்கிலியன் தோப்பு யமுனா ஏரி போன்ற வரலாற்று மையங்களையும்  சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய வகையில் மேலும் மேம்படுத்த வேண்டும்.

மேற்படி இடங்கள் அபிவிருத்தி செய்யப்படாதுள்ள நிலையிலும் வடக்கு நோக்கி வருகின்ற சுற்றுலாப் பயணிகள் இந்த இடங்களுக்குச் செல்வதை வழமையாகக் காணக்கூடியதாகவே இருக்கின்றது.

Untitled-1 copy

Related posts: