யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கூட்டம் – முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வு!

கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளை சீர்ப்படுத்துவற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சினால் யாழ் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக எடுத்து வரப்பட்டுள்ள மண்ணெண்ணையை தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கூடாக கடற்றொழில் சங்கங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடற்றொழில் சங்கங்களினால் சரியான முறையில் விநியோகிக்கப்படுவதை பிரதேச செயலாளர்கள் மற்றும் கடற்றொழிலாளர் திணைக்களம் ஆகியவற்றின் மூலம் கண்காணிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை தொடர்ச்சியாக மண்ணெண்ணை உட்பட்ட எரிபொருட்களை எடுத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால், அடுத்தடுத்த கட்டங்களில் விவசாயிகளுக்கும் ஏனைய தரப்பினருக்கும் முன்னுரிமை அடிப்படையில் மண்ணெண்ணை வழங்கப்படும் என்று இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அத்துடன் விவசாய உரம், மருந்துப் பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களை இந்தியாவில் இருந்து காங்கேசன்துறைக்கு எடுத்து வருவதற்கு தன்னால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற முயற்சிகள் தொடர்பாக இதன்போது தெளிவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன்னுடைய முயற்சிக்கு இந்தியத் தரப்பில் இருந்து சாதகமான பதில் கிடைத்திருப்பதை சுட்டிக்காட்டியதுடன், இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக இந்திய மற்றும் தமிழக அரசுகளும் தமிழக மக்களும் வழங்கி வருகின்ற ஒத்துளைப்புக்களையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
இன்றைய கூட்டத்தில், யாழ் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் ஆராயப்பட்ட நிலையில், அவைதொடர்பாக தொடர்ந்தும் ஆராய்ந்து எதிர்வரும் கூட்டங்களில் நியாயமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மகேசன், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|