முரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, September 22nd, 2020

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை ஒன்றை விரைவில் உருவாக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று 22.09.2020 கேள்வி பதில் அமர்வில் கலந்து கொண்டு பதில் அளிக்கையிலேயே குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக வடக்கு கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்களின் தொழில் நடவடிக்கை அதிகரித்துள்ளமையினால் வடக்கு கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

‘நீண்டகாலமாக தென்னிலங்கை மீனவர்கள் பருவ காலங்களில் வடக்கு கடற்பரப்பில் தொழில் நடவடிக்கையில் ஈடுபடுகின்ற வழக்கம் காணப்படுகின்றது.

அதேபோன்று வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களும் பருவ காலங்களில் தென்னிலங்கையில் தொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

இந்நிலையில், யுத்தம் நிறைவடைந்த பின்னர், வடக்கு கடலில் தொழிலில் ஈடுபடுகின்ற பூர்வீக உரிமையுடைய தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.

அனுமதி வழங்கப்பட்டிருப்பவர்களுக்கும் மேலதிகமானோர் உள்ளூர் கடற்றொழிலாளர்களுடன் இணைந்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் வடக்கின் பூர்வீக கடற்றொழிலாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ளுகின்றனர். இவற்றை நீக்குவதற்காக தேசியக் கொள்கை ஒன்று விரைவில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது. குறித்த கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது’ என்று தெரிவித்தார்.

மேலும், இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் காரணமாக வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாணும் நோக்கில் இந்திய அரசாங்கத்துடன் கலந்துராயாடி வருகின்ற நிலையில் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் குறித்த அத்துமீறல்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்தார்.

ஏற்றுமதி செலவு அதிகரித்துள்ளமையால் சர்வதேச சந்தையில் இலங்கை மீன்களுக்கான கேள்வியை தக்க வைக்க ஏதுவாக அவற்றுக்கான வற் வரிகள் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்தனர்.

இந்நிலையில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் மழுமையான கவனத்தை செலுத்தி குறித்த துறைகளில் தன்னிறைவு அடைவதுடன் ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும் என்பதில் தற்போதைய அரசாங்கம் தீர்க்கமாக செயற்பட்டு வருகின்ற நிலையில், ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தீர்த்து வைக்கப்படும் எனத் தெரிவித்ததுடன், ஜனாதிபதி மற்றும் ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையாடி அவை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்

Related posts:

ஒரு சமூகத்தின் மாற்றத்தை நிர்ணயிக்கின்ற பொறுப்பு அந்த சமூகத்தில் வாழுகின்ற இளைஞர் சமூகத்தையே சார்ந்த...
தமிழர்களின் உரிமைகளுக்கும் உயர்ந்த வாழ்கை தரத்திற்கும ஒரே வழிமுறை ஈ.பி.டி.பி. யின் பொறிமுறைதான் : அம...
வன்னி மக்களின் இடர் துடைப்பேன் என்ற நம்பிக்கை இருபது வருடங்களுக்கு முன்னரே எனக்கு இருந்தது – அமைச்சர...