முன்னாள் போராளிகளின் கடன் இரத்தாகும் : டக்ளஸ் எம்.பி.யின் கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் அமைச்சர் சுவாமிநாதன்!

Saturday, May 12th, 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகொளை அடுத்து  யுத்தத்தின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு வழங்கிய கடன்களை மீளச் செலுத்த முடியாதவர்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கிணங்க திறைசேரியுடன் கலந்துரையாடி விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா புனர்வாழ்வளிக்கப்பட்ட பொதுமக்கள் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

யுத்தம் முடிவுற்ற பின்னர் 2012 ஆம் ஆண்டு புனர்வாழ்வு பெற்று சமூகமயப்படுத்தப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு புனர்வாழ்வு அதிகார சபையின் ஊடாக சுயதொழில் கடன் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் 4 வீத நிவாரண வட்டிவீதமும் ஒரு வருட சலுகைக்காலமும் வழங்கப்பட்டது. கடனை மீளச் செலுத்துவதற்கான ஆகக்கூடிய காலமாக பத்து வருடங்கள் வழங்கப்பட்டிருந்தன. இதில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றின் ஊடாக மக்களுக்கு இந்தக் கடன் வழங்கப்பட்டன. புனர்வாழ்வு அதிகார சபையின் ஊடாக இக்கடன் திட்டத்துக்கு 8 வீத வட்டி நிவாரணம் வழங்கப்பட்டது.

கடன் வழங்கும்போது பயனாளிகளுக்கு கடன்திட்டம் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டதுடன் விண்ணப்பித்தவர்களுக்கு இரண்டு பிணைதாரர்களின் கையொப்பத்துடனேயே கடன் தொகை வழங்கப்பட்டது. இவ்வாறான நிலையில் வறுமை மற்றும் குறைந்த பொருளாதாரம் கொண்ட குடும்ப சூழ்நிலையால் பலர் இந்தக் கடன்களை மீளச் செலுத்த முடியாதுள்ளனர்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களை மீளச் செலுத்த முடியாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை நான் மறுக்கவில்லை இந்த குற்றச்சாட்டினை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன்.

Related posts:


உலக மாற்றங்களை எதிர்கொள்வதற்கான புதிய பாடத்திட்டம் வெற்றியடைய ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும். - அமைச்...
கிளிநொச்சி மாவட்ட தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை...
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி தீர்வு காணும் நோக்கில் கிளிநொச்சி கண்ணகைபுரத்தில் ...