மலையக மக்களுக்கு தனிவீட்டுத் திட்டம்: இந்திய உதவி வரவேற்கத்தக்கது – டக்ளஸ் எம்.பி.!

Thursday, April 4th, 2019

சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கை அரசியலின் முதலாவது பரம்பரையும், அதனது இரண்டாவது பரம்பரையும் ஒரே விதமாக செயற்படுகின்றபோது, வடக்கில் தமிழ் மக்களும், மலையக தமிழ் மக்களும் தங்களது ஜனநாயக உரிமைகளைக் கோரி, போராட்ட களத்திற்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது தவிர்க்க முடியாததாகியுள்ளது என்றே நினைக்கினறேன்.

இந்த வகையில் பார்க்கின்றபோது தோட்ட தொழிலாளர்களது போராட்டம் என்பது 1000 ரூபா நாளாந்த ஊதியத்தையும் தாண்டிய போராட்டமாகும். அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்கின்ற போராட்டம் வரையில் அதனை முன்னெடுக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கின்றது என்றே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

சுதந்திர மக்களாக வாழக்கூடியதான அவர்களது உரிமைகள், வீட்டுரிமை, கல்வி கற்கும் உரிமை, தான் விரும்புகின்ற தொழிலை செய்கின்ற உரிமை, சுகாதார வசதிகள், கலாசார வாழ்க்கை போன்றவை அவர்களது வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட விடயங்களாகவே இருக்கின்றன.

சமூக அரசியலானது, இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இன்னொரு இனம் என்ற ரீதியிலேயே அவர்களை இன்னமும் பார்க்கின்றது. இடதுசாரி அரசியலும் இந்த நிலையிலிருந்து முழுமையாகவே மாறுபட்டதாக இல்லை. இத்தகைய கருத்தோட்டங்களை அகற்றாமல் இம் மக்களது போராட்டங்களை வெல்ல வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவே சமூக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆட்சியாளர்கள் இம் மக்களுக்கு எதையாவது செய்திருக்கின்றார்கள் எனில், அவர்களை தோட்டங்களிலேயே தடுத்து வைத்திருப்பதைத்தான் செய்திருக்கிறார்கள். அவர்களுக்குரிய உரிமைகளை போதியளவு கவனத்தில்கூட எடுக்கவில்லை என்றே தெரிய வருகின்றது.

இம்மக்களுக்கென 07 பர்ச்சஸ் காணியும், வீடமைப்பதற்கான கடனும் வழங்கப்படுவதாகக் கூறுகின்ற நிலையிலும், இன்னமும் தோட்டங்களில் வேலை செய்கின்ற தொழிலாளர்களுக்கு மாத்திரமே அவை வழங்கப்படுவதாகவும், தோட்டங்களுக்கு புறம்பாக வேறு தொழில்களில் ஈடுபடுகின்ற மலையக மக்களுக்கு அந்த உரிமை கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இந்நாட்டு பிரஜைகள் என்ற வகையில் தோட்ட தொழிலாளர்களது தற்போதைய குடும்ப வாழ்க்கையானது மிகுந்த பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளது. பாரிய பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் தோட்டத்தை விட்டு வெளியில் தொழில்வாய்ப்புகளைத் தேடிச் செல்கின்றவர்களது தொகை அதிகரித்து வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

அநேகமான குடும்பங்களில் ஆண் அல்லது பெண்களில்; ஒருவராவது வெளி வேலைகளுக்கென வீட்டைவிட்டு வெளியேறியுள்ள நிலையே காணப்படுகின்றது.

அந்த வகையில் இந்த மக்களின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு முன்னேற்ற நகர்வினை கொண்டு  தரக் கூடியதான செயற்பாடுகள் மிகவும் அத்தியாவசியமாகவே உள்ளது. இத்தகைய நிலையில் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களது முயற்சிகளின் காரணமாக அம் மக்களுக்கான வீட்டுப் பிரச்சினைகள் தனி வீட்டுத் திட்டங்களாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மலையக மக்களுக்கான தனி வீட்டுத் திட்டங்களில் இந்திய அரசின் பங்களிப்பு பெரிதும் வரவேற்கத்தக்கது. அதுமட்டுமன்றி, இந்தியா அம்மக்களது தேவைகளில் பல்வேறு துறைகள் சார்ந்தும் மிக அதிகளவிலான பங்களிப்பினை வழங்கி வருகின்றது. அதற்காக எமது மக்கள் சார்பாக எனது நன்றியை இந்திய அரசுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மலையக மக்களின் முன்னோடிகளின் பெயர்களில் வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் அம் மக்களுக்கு அத் திட்டங்கள் தொடர்பிலான உணர்வுப்பூர்வமான உரித்தினை ஏற்படுத்துவதற்கும் உதவும் என நினைக்கின்றேன்.

குறிப்பாக, அம் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தலைவர்களுள் ஒருவரும், இந்த நாட்டின் திரைப்படத்துறைக்கு பாரிய பங்களிப்பினை செய்தவருமான அமரர் வி. பி. கணேசன் அவர்களது பெயரைக் கொண்டு ஒரு வீடமைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். இதேபோன்று மலையக மக்களின் உரிமைகள் தொடர்பில் போராடியுள்ள ஏனைய தலைவர்களது பெயர்களிலும் வீட்டுத் திட்டங்களை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அந்த வகையில் மலையகம் சார்ந்து முன்னெடுக்கப்படுகின்ற நல்ல விடயங்கள் தொடர்பில் எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Related posts: