இனமுரண்பாடு தொடருமானால்  நாடு பொருளாதார மேம்பாடு காணாது – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, July 8th, 2017

எமது நாட்டில் சுமார் முப்பது வருட காலமாக இடம்பெற்று முடிந்துள்ள கொடிய யுத்தம் காரணமாக, எமது நாட்டிலே வாழ்ந்திருந்த அனைத்து இன சமூகங்களைச் சேர்ந்த மக்களும் பல்வேறு நிலைகளில் கொல்லப்பட்டுள்ளனர். அங்கவீனமாக்கப்பட்டுள்ளனர். உடைமை மற்றும் சொத்தழிவுகளுக்கு உட்பட்டுள்ளனர். பல்வேறு உள ரீதியிலான பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளனர். இன்று, எமது மக்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்ற காலகட்டத்தில் இருந்து வரும் நிலையில், பல்வேறு இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களுக்கும் முகங்கொடுத்து வர வேண்டிய நிலைக்கும், வடக்கு கிழக்கு மாகாணங்களிலே பல்வேறு கலாசார சீரழிவுகளுக்கும் தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்த அனைத்து இடர்கள் மற்றும் பிரச்சினைகளையும் சமாளித்து இந்த நாடு முன்னேற வேண்டுமாயின், அதற்கான பொருளாதார நிலையை எட்ட வேண்டியுள்ளது. எனவே, தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளைச் சமாளித்துக் கொண்டே, நிலையான பொருளாதாரத்தை எட்ட வேண்டியுள்ளது. இந்த பொருளாதார நிலையை எட்டுவதற்கான பாதையில் மிக முக்கியமான காரணியாக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கருதப்படுவது தேசிய நல்லிணக்கம் மற்றும் இனங்களுக்கிடையிலான சக வாழ்வாகும். இனங்களுக்கிடையில் தொடர்ந்தும் முரண்பாடு நிலை தொடருமானால், இந்த நாட்டில் நிலையானதொரு பொருளாதாரத்தை நோக்கி நகர முடியாத நிலையே ஏற்படும் என்பது யாவரும் அறிந்து கொண்டுள்ள யதார்த்தமாகும்.

எமது நாட்டில் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின் முதலில், எமது மக்களது உணர்வு ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. அவை தீர்க்கப்பட்டால் மாத்திரமே தேசிய நல்லிணக்கமானது உணர்வுப்பூர்வமானதாகவும், வலுவுள்ளதாகவும் அமைவதற்கு சாத்தியமாகும். அன்றி, தேசிய நல்லிணக்கம் என்பது பலவந்தமாகக் கட்டியெழுப்பக்கூடியதல்ல.

எமது மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகள் பல இருக்கின்றன. அவை தொடர்பில் தொடர்ந்தும் நான் இந்தச் சபையிலே ஏற்கனவே கூறி வந்திருக்கிறேன். அவற்றில் மிகவும் முக்கியமான ஒரு விடயம் பற்றியதாகவே எனது இன்றைய தனி நபர் பிரேரணை அமைந்துள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தை  விட்டுக் கொடுக்கவோ, இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை விட்டுக் கொடுக்கவோ ஒரு போதும் விரும்புவதில்லை. எமது மக்கள் தமிழர்களாகவும், அதே நேரம் இலங்கையர்களாகவுமே  வாழ விரும்புகிறார்கள். இதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. அந்த வகையில், எமது மக்களது உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

Related posts:

பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர் - அமைச்சர் டக்ளஸ் த...
நீர்கொழும்பு முன்னக்கர விவகாரத்திற்கு விரைவில் நியாயமான தீர்வு - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்ப...
யாழ் மாவட்ட காணி மத்தியஸ்தர் சபையினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமக்கான நீதியைப் பெற்றுத...