மக்கள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார்கள் எனக் கூறிக்கொண்டாலும் அவ்வாறான நிலைமை இன்னமும் ஏற்படவில்லை என்றே தெரிகின்றது – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, May 9th, 2019

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தமானது, இந்த நாட்டின் பொருளாதாரத் துறையிலும், மக்களது பொது வாழ்க்கையிலும் பாரிய பாதிப்புகளை உண்டு பண்ணியிருப்பது கண்கூடாகவே தெரிய வருகின்றது.

இன்றும்கூட, நாட்டில் சுமுகமான நிலைமை காணப்படுவதாக இல்லை. கடைகள் திறந்திருந்தும், பல்வேறு நிறுவனங்கள் திறந்திருந்தும், வாகனங்கள் போக்குவரத்துகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தும், வழமைபோல் பெருமளவில் மக்கள் நடமாற்றம் இல்லாத நிலைமையினையே காணக்கூடியதாக இருக்கின்றது.

முழுமையாக இந்த நாடே ஒருவித சூனியத்தன்மையின் ஆளுகைக்கு உட்பட்டுள்ள நிலைமையே காணப்படுகின்றது. நாட்டில் சுமுக நிலை தோன்றுவதாகவும், மக்கள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார்கள் என ஆளுக்காள் கூறிக் கொண்டாலும், பாதையில் இறங்கிப் பார்க்கின்றபோது, அவ்வாறு தெரிவதாக இல்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற விஷேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

‘2019ஆம் ஆண்டில் கட்டாயமாக விஜயம் செய்ய வேண்டிய நாடு இலங்கை’ என சுற்றுலாப் பயணத்துறை சார்ந்த வழிகாட்டியான ‘லோன்லி பிளனெற்’ (டுழநெடல Pடயநெவ) ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன் காரணமாக இலங்கை தொடர்பில் வெளிநாட்டவர் மத்தியில் ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால், தற்போது இலங்கை தொடர்பில் விழிப்புணர்வு கொள்ள வேண்டிய நிலைக்கு வெளிநாட்டவர்களை மட்டுமல்லாது, உள்நாட்டவர்களையும் தள்ளிவிட்டுள்ளது.

சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி ஒரு பக்கம் தொடர்கின்ற நிலையில், அதை நம்பியிருக்கின்ற ஏறத்தாள சுமார் 4 இலட்சம் மக்களது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கென சில சலுகைகளை வழங்குவதாக நீங்கள் அறிவித்தாலும், அதனை நான் வரவேற்பதுடன், அது முற்று முழுதாக சுற்றுலாத்துளையை நம்பி வாழுகின்ற அனைவருக்கும் நிவாரணங்களை வழங்கப் போவதில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

குறிப்பாக, சுற்றுலாத்துளையையும்; நம்பிய முச்சக்கர வண்டிக் கைத்தொழிலானது கிட்டத்தட்ட நூற்றுக்கு 80 வீதமாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

சுற்றுலாத்துறை வழிகாட்டிகளாக தங்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொண்டிருந்த பலரது வாழ்க்கை இன்று பாதிக்கப்பட்டுள்ளது.

அன்றாடக் கூலிகளாக வேலை செய்து, தங்களது வாழ்வாதாரங்களை அன்றாடம் ஈட்டிக் கொள்கின்றவர்களுக்கு தற்போது போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. அவர்களது குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ள நிலைமைகள் காணப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

யாழ். மருத்துவ பீடம் மற்றும் வடக்கு கல்வி சமூகத்தின் எதிர்பார்ப்புக்களுக்கு விரைவில் தீர்வு - அமைச்ச...
ஏற்றுமதி செய்யப்படும் மீன்களுக்கான விலையில் திடீர் வீழ்ச்சி - பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களின் உர...
வலி வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த மற்றுமொரு தொகுதி காணிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வ...