போதைப்பொருள் வியாபாரிகளின் இலக்கு பாடசாலை மாணவர்களாகவே இருக்கிறது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, April 4th, 2019

போதைப் பொருளுக்கு எதிராக ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்டு வருகின்ற பாரிய செயற்பாடுகள் வரவேற்கத்தக்க வகையிலேயே இடம்பெற்று  வருகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவில் தற்போது போதைப் பொருட்கள் கைப்பற்றப்படுகின்ற சம்பவங்களும், அது தொடர்பில் கைது செய்யப்படுகின்றவர்களது எண்ணிக்கையும் மிக அதிகளவில் இடம்பெற்று வருவதை அவதானிகக் கூடியதாக இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கை போதைப் பொருள் சந்தையில் அதற்கான தட்டுப்பாடுகளோ, விலைக் குறைவுகளோ இதுவரையில் ஏற்படவில்லை என்றே சமூக மட்டங்களிலிருந்து தெரிய வருகின்றது. இது தொடர்பிலும் அவதானங்கள் தேவை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதேநேரம், போதைப் பொருள் வர்த்தகர்கள் மிக அதிகளவில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தே இவ்வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றே தெரிய வருகின்றது. இதன் காரணமாக பாடசாலைகளுக்கருகில் இத்தகைய வியாபாரங்கள் மிக அதிகமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.

அந்தவகையில், இந்த நாட்டில் பாடசாலை மட்டத்திலிருந்தே – அதன் ஆரம்பப் பருவத்திலிருந்தே போதைப் பொருள் தொடர்பான விழிப்பூட்டல்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

இதனை பாடத் திட்டங்களில் மாத்திரமே கொண்டிருக்காமல், சிறுவர்களுக்கான கதைகளின் ஊடாகவும் கொண்டு வரலாம். பல்வேறு நீதிக் கதைகளை நாம் சிறுவர் இலக்கியங்களில் காண்கின்றோம். அதேபோன்று, போதைப் பொருளின் அபாயங்கள் தொடர்பிலும் சிறுவர் இலக்கியங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தையும் இங்கு அவதானத்துக்கு கொண்டு வருகின்றேன்.

அத்துடன், பாதுகாப்புப் படைகள் அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாரத்திற்கும், மக்கள் தொகைக்கும் ஏற்ப நிலை கொள்ள வைக்கப்படல் வேண்டும் என்பதுடன், அந்தந்த மாவட்டங்களின் மக்களது பயன்பாட்டு மொழி பரிச்சயம் கொண்டவர்களை அவற்றில் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற விடயத்தையும் இங்கு மீள சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.

Related posts: