தமிழும் சிங்களமும் அரச கரும மொழிகளாதல் வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Thursday, December 7th, 2017

 ‘இலங்கையின் அரச கரும மொழி சிங்கள மொழியாதல் வேண்டும் என்று 18(1) உறுப்புரையிலும், தமிழ் மொழியும் அரசகரும மொழி ஒன்றாதல் வேண்டும் என்று 18(2) உறுப்புரையிலும் கூறப்பட்டுள்ளது.

எனினும், இந்த இரு உறுப்புரைகளும் இணைந்து, ‘சிங்கள மொழியும், தமிழ் மொழியும் இலங்கையின் அரச கரும மொழிகளாதல் வேண்டும்’ என்றே குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும் – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு, உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்..

அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கையின் தேசிய மொழிகள் சிங்களமும், தமிழும் ஆதல் வேண்டும் என்றும், (19ஆம் உறுப்புரை) சிங்களமும், தமிழும் இலங்கை முழுவதிலும் நிர்வாக மொழிகளாக இருத்தல் வேண்டும் என்றும், (அரசியலமைப்பிற்கான 16வது திருத்தத்தால் திருத்தப்பட்டவாறான – 22(1)ஆம் உறுப்புரை)

வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் தவிர்ந்த இலங்கையின் எல்லா மாகாணங்களிலும், சிங்களம் நிர்வாக மொழியாக இருத்தல் வேண்டும் என்பதுடன், பொதுப் பதிவேடுகளை பேணி வருவதற்காகவும், பகிரங்க நிறுவனங்களினால் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், – (அரசியலமைப்பிற்கான 16வது திருத்தத்தால் திருத்தப்பட்டவாறான 22(1)ஆம் உறுப்புரை)

ஆயின், உதவி அரசாங்க அதிபரின் பிரிவொன்றை உள்ளடக்கும் கூறு எதனதும் சனத்தொகை சிங்கள அல்லது தமிழ் மொழிவாரியான சிறுபான்மை சனத்தொகை என்ன விகிதாசாரத்தைக் கொண்டுள்ளதோ, அதனைக் கருத்திற் கொண்டு சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அல்லது அத்தகைய இடப்பரப்பு அமைந்திருக்கக் கூடியதான மாகாணத்தில் நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படும் மொழி தவிர்ந்த ஒரு மொழி அத்தகைய இடப்பரப்புக்கான நிருவாக மொழியாகப் பயன்படுத்தலாம் என – ஜனாதிபதி பணிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. – (அரசியலமைப்பிற்கான 16வது திருத்தப்பட்டவாறான 22(1) ஆம் உறுப்புரை)

இதன் காரணமாக 29 பிரிவுகள் இரு மொழி பிரதேச செயலகப் பிரிவுகளாக வர்த்தமானியில் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பின்னர் 72 பிரிவுகள் இரு மொழி பிரதேச செயலகப் பிரிவுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில்,

இந்த 72 பிரிவுகளில் 41 பிரிவுகள் செயற்பட பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 31 பிரிவுகள் பிரகடனப்படுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்படப்பட்டுள்ளது.

இரு மொழி அமுலாக்கல் தொடர்பில் இதுவரை 23 சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டும், அதன் செயற்பாடுகள் இன்னும் எமது மக்களுக்கு பலன் தராத நிலையிலேயே இருக்கின்றது என்பதை நான் இங்கு அவதானத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

Untitled-4 copy0

Related posts: