நுண்கடன் விடயத்தில் பொருத்தமான வழிமுறை வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, February 6th, 2019

எமது பகுதிகளை மட்டுமல்லாது, இன்று நாட்டின் கிராமப் பகுதிகளை அதிகமாக ஆட்டுவித்து வருகின்ற நுண் கடன் நிறுவனங்கள் தொடர்பில் ஒரு பொறிமுறை அவசியமாகின்றது. நிதி அமைச்சு இது தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கும் என எமது மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை. நீதி அமைச்சாவது இந்த விடயத்தில் தலையிட்டு ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்iகியனை நான் இந்தச் சந்தர்ப்பத்திலே மீண்டும் முன்வைக்க விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற குற்றவாளிகளை ஒப்படைத்தல் கட்டளைச் சட்டம் மற்றும் கடன் இணக்க கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நிதி அமைச்சர் ஏற்கனவே ஒரு இலட்சம் ரூபாவுக்கு உட்பட்ட கடன் தொகையினைப் பெற்ற பெண்களுக்கு என ஒரு திட்டத்தை அறிமுகம் செய்திருந்தும், அத் திட்டத்தின் நிபந்தனைகள் காரணமாக அத் திட்டம் நுண் கடன் பெற்றிருக்கின்ற எமது குடும்பத் தலைமைத்துவப் பெண்களுக்கு பயனில்லாமல் போய்விட்டது.

அதுமட்டுமின்றி, அத் திட்டம் காரணமாக நுண் கடன் நிறுவனங்களால் எமது பெண்கள் மேலும் இழிவுபடுத்தப்படுகின்ற நிலைக்கே ஆளாக வேண்டியும் ஏற்பட்டது.

மிக அதிகரித்த வட்டி வீதங்களில், எவ்விதமான உத்தியோகப்பூர்வ ரசீதுகளும் இன்றி, வழங்கப்படுகின்ற இத்தகைய கடன்கள் சொற்பத் தொகையாக இருப்பினும் அதனை எமது மக்களின் வாழ்நாளில் முழுமையாக அடைக்க முடியாத வகையிலேயே செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் மேற்படி கடன்களை வசூலிப்பதற்காக ஈடுபடுத்தப்படுகின்ற நபர்களால் எமது மக்கள் – குறிப்பாக பெண்கள் – அதுவும் குடும்பத் தலைமைத்துவப் பெண்கள் எதிர்நோக்குகின்ற இன்னல்கள் சொற்களில் அடங்காதவையாகும்.

இன்றும்கூட நாளாந்த பத்தரிகைகளில் விளம்பரப் பகுதிகளை எடுத்துக் கொண்டால், நிதி நிறுவனங்களுக்கு கடன்கனை வசூலிப்பதற்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரங்களை அதிகமாகக் காண முடிகின்றது.

நூற்றுக்கு 25 வீதத்திலிருந்தே இத்தகைய நிதி நிறுவனங்கள் வட்டிகளை அறவிடுகின்றன. சில நிதி நிறுவனங்கள் காலப்போக்கில் நூற்றுக்கு நூறு வீதத்தையும் தாண்டிய வட்டி அறவீடுகளைப் பெறுவதையும் காணக் கூடியதாக இருக்கின்றது.

இந்தவகையில் இந்த நிதி நிறுவனங்கள் கடன்களை வசூலிக்கச் செல்கின்ற பாணிகளினால் ஏற்படுகின்ற குழப்பங்கள் – பாதிப்புகள் – சமூகக் குற்றங்களை நோக்கியதான வழிகளை உருவாக்கி வருகின்றமையினாலும், நீதி, நியாயமற்ற வகையில் மக்கள் சுரண்டப்பட்டு வருவதனாலும், எமது மக்கள் தற்கொலைகளை நாடிச் செல்வதாலும், ஒரு பொறிமுறையினை உருவாக்குவதற்கு நீதி அமைச்சு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

குறிப்பாக, கடன்களை வசூலிக்க வருகின்ற நபர்கள் தனியாக வீடுகளுக்குள் நுழையாத வகையில், கிராம சேவையாளருடனோ அல்லது அப்பகுதிக்கு பழக்கப்பட்ட சமூக ஆர்வலருடனோ வருவதற்கான ஏற்பாட்டினை வகுக்க வேண்டும்

கடன்கள் வழங்குகின்றபோது அதற்கான உரிய – உத்தியோகப்பூர்வமான பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எல்லையற்ற வகையிலான வட்டி வீதங்களை குறைத்து, தண்டமாக அறவிடுகின்ற வட்டிகளை அகற்றிவிடல் வேண்டும்.

அதேபோன்று கடனை மீளச் செலுத்தி முடிப்பதற்கு குறைந்தபட்சமாக இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

மேற்படி நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் சமூகத்தின் நிலைப்பாடுகள் தொடர்பில் ஆராயவென ஆணைக்குழுவொன்றினை அமைக்க வேண்டும்.

அதேநேரம், இதற்கு சமாந்திரமான காலத்திலேயே எமது மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துகின்ற விசேட திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசு உடனடியாக முன்வர வேண்டும்.

இத்தகைய விடயங்களை உள்ளடக்கி, ஒரு பொறிமுறை உருவாக்கப்படுமானால், நுண் நிதி மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டு வருகின்ற மக்களுக்கு உரிய நிவாரணத்தினை வழங்க முடியுமெனக் கருதுகின்றேன்.

Related posts:

வாக்குறுதி வழங்கியவர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கும் என நம்புகிற...
டெங்கு நோயிலிருந்து வடக்கு மக்களை பாதுகாக்க விசேட திட்டம் உருவாக்கப்படவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ...
கோட்டபயவின் வெற்றியில் உங்கள் வெற்றியை உறுதி செய்யுங்கள்: மறவன்குளம் மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி ...