நவீன மாற்றங்களுக்கு தபால்துறை உள்ளடக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Wednesday, September 5th, 2018

1798ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு தற்போதைக்கு 220 வருடங்களுக்கான வரலாற்றைப் பதிவு செய்துள்ள இலங்கை தபால் சேவையானது இன்று இந்த நாட்டில் ஏனைய அரச துறைகளைப் போல் ஊழியர்களது போராட்டங்களுக்கு முகங்கொடுத்து வருகின்ற ஒரு நிறுவனமாக மாறிவிட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அஞ்சல் அலுவலக கட்டளைச் சட்டத்தின் கீழான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் –

இந்த நாட்டில் தபால் துறையினை நம்பி சுமார் 27 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர் எனத் தெரிய வருகின்றது. அண்மையில் தபால் பணியாளர்கள் மேற்கொண்டிருந்த பணிப் பகிஸ்கரிப்பின்போது 11 நாட்களில் சுமார் 2 இலட்சம் கடிதங்கள் பொதிகள் விநியோகிக்கப்படாமல் தேங்கிக் கிடந்ததாகக் கூறப்படுவதிலிருந்து இந்நாட்டு தபால் சேவையின் அவசியமானது நன்கு புலப்படுகின்றது என்றே கூற வேண்டும்.

அதே நேரம் இங்கு இன்னுமொரு விடயத்தினையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது 2011ஆம் ஆண்டு தபால் துறை பணியாளர்களது பணிப் பகிஸ்கரிப்பொன்று இடம்பெற்றிருந்த நிலையில் சுமார் ஒரு வார காலத்துக்குள் சுமார் ஒன்றரை மில்லியன் கடிதங்கள் பொதிகள் விநியோகிக்கப்படாமல் தேங்கிக் கிடந்ததாகக் கூறப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரையிலான 7 வருட காலத்திற்குள் சுமார் 13 இலட்சம் கடிதங்கள் பொதிகள் விநியோகத்தை அரச தபால் சேவைத் துறை இழந்துள்ளது. தனியார்த்துறைகள் இத்துறையில் வளர்ச்சி பெற்றமை மற்றும் நவீன தொலைத் தொடர்பு சாதனங்களின் தீவிர வளர்ச்சி அவை தொடர்பிலான மக்களின் ஈர்ப்பு என்பன இதற்குக் காரணமாகலாம். இந்த நிலையில் அஞ்சல் திணைக்களத்திற்கு சேவைகளை வழங்குவதில் நட்டமேற்படுவது புதுமையானதொரு விடயமல்ல. இதனை ஈடு செய்து கொள்ளும் முகமாக கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 07ஆம் திகதி இறுதியாக அஞ்சல் கட்டணம் திருத்தப்பட்டதன் பின்னர் சரியாக நான்கு ஆண்டுகள் கழிந்த நிலையில் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 07ஆம் திகதி இந்த புதிய கட்டண திருத்தம் கொண்டுவரப்பட்டு பின்னர் பிற்போடப்பட்ட நிலையில் இன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கைக்குப் பின்னரான காலத்தில் தபால் சேவையினை ஆரம்பித்துள்ள அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளில் தபால் துறையானது காலத்திற்கேற்ப மாற்றங்களுடன் இன்றும் தன்னிகரில்லா நிறுவனங்களாக செயற்பட்டு வருகின்றன.

ரெலிகிராப் சேவை சொரூபத்தைக் கொண்டதாக 1856ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட தபால் சேவையானது 1871களில் பண பரிமாற்று சேவையினையும் ஆரம்பித்து இன்று உலகளாவிய ரீதியில் பிரபலம் பெற்ற ‘வெஸ்டர்ன் யூனியன்’ நாமம் கொண்டு பலத்துடன் செயற்பட்டு வருகின்றது.

1871ஆம் ஆண்டு ஜப்பானில் ஆரம்பிக்கப்பட்ட தபால் சேவையானது 1949களில் தபால் தொலைத் தொடர்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு தபால் காப்புறுதி பிரிவினையும் உள்ளடக்கி பின்னர் வங்கிச் சேவையினையும் உள்ளடக்கி இன்று அந்நாட்டு மக்களிடையே மிகவும் நெருக்கமான சேவை வழங்கும் நிறுவனமாக செயற்பட்டு வருகின்றது.

இலங்கை தபால் சேவையினைப் பொறுத்த வரையில் நிலைமை தலைகீழாகவே மாறிவிட்டுள்ளது. ஆரம்பத்தில் படிப்படியாக தபால் துறையுடன் இணைந்திருந்த பிற சேவைகள் அனைத்தும் அதிலிருந்து அகற்றப்பட்டு இன்று தபாலுடன் மாத்திரமே அது தனித்துப் போய் நிற்கின்ற நிலையே ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் தபால் சேவையுடன் இணைந்திருந்த தந்திச் சேவை பிரித்தெடுக்கப்பட்டது. தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சாக செயற்பட்டு வந்த அமைச்சிலிருந்த தொலைத் தொடர்பு பிரித்தெடுக்கப்பட்டது. சேமிப்பு பிரிவு தேசிய சேமிப்பு வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது.  முகவர் தபால் நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.  ஊழியர் பற்றாக்குறைகளை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று தபால் திணைக்களமாக இருக்கின்றதும் நாளை தனியார்மயப் படுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சம் அங்கு பணியாற்றுகின்ற பணியாளர்களிடையே ஏற்படும் அளவிற்கு இன்று அத்துறையானது கைவிடப்பட்டு வருவதாகவே தெரிய வருகின்றது. இந்த நிலைமையானது 1998ஆம் ஆண்டு முதல் இருந்து வருகின்றது.

இலங்கை தபால் துறை வரலாற்றின் ஆரம்ப காலங்களில் நகரங்களை மையப்படுத்தியதாக அமைக்கப்பட்டுள்ள  கொழும்பு காலி நுவரெலியா மற்றும் கண்டி நகரங்களில் காணப்படுகின்ற தபால் திணைக்களத்திற்குரிய கட்டிடங்கள் எமது நாட்டின் வரலாற்று ஆவணங்களாக இன்றும் திகழ்கின்றன. மேலும் இவை அமையப்பெற்றுள்ள இடங்களைப் பொறுத்து அதிக பெறுமதியான காணிகளைக் கொண்டவையாகும்.

இத்தகைய கட்டிடங்கள் அடங்கிய காணிகளை ஹோட்டல் துறைக்கென விற்பதற்கு தயார் நிலை இருப்பதாக அறிய முடிகின்றது. வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் குறிப்பாக – யாழ்ப்பாணத்தில் வாடகைக் கட்டிடங்களிலேயே பல தபாலகங்கள் – உப தபாலகங்கள் செயற்பட்டு வருகின்றன. இந்த நிலை நாட்டில் மேலும் இருக்கக்கூடும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அஞ்சல் அலுவலக கட்டளைச் சட்டத்தின் கீழான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:


நலிவுற்ற மக்களது வாழ்வியலையும் மேம்படுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா- ஊரெழு மக்கள் சுட்டிக்காட்டு!
நந்திக் கடல் புனரமைப்பு செய்யப்படவேண்டும் - புதிய பாதீட்டு உரையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
யாழ். மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவான...