நலன்புரி முகாம்களில் வாழும் மக்களின் உணர்வுகளுக்கு அரசாங்கம் மதிப்பளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Saturday, March 5th, 2016

04.03.2016 வெள்ளிக்கிழமை

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்ற எமது நிலைப்பாட்டுக்கு அமைய நலன்புரி முகாம்களில் வாழும் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக புதிய அரசுடன் கலந்துரையாடி மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

உடுவில் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் தமது மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மக்கள் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில்; பங்கெடுத்தோருடன் கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

1990 ஆம் ஆண்டு வலி. வடக்கு பகுதியிலிருந்து இந்த மக்கள் இடம்பெயர்ந்து அவலப்பட்டபோது அவர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட தேவைப்பாடுகளை நாமே முன்னெடுத்திருந்தோம் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

கடந்த காலங்களில் ஆட்சியதிகாரத்தில் நாம் இருந்தபோது நலன்புரி முகாம்களில் வாழும் மக்களின் நலன்களில் நாம் மிகுந்த அக்கறை செலுத்தி அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளான மின்சாரம் குடிநீர் உள்ளிட்ட தேவைப்பாடுகளை இனங்கண்டு அவற்றை தீர்த்து வைத்திருந்;ததுடன் உயர் பாதகாப்பு பகுதிகளில் உள்ள காணிகளை விடுவித்து மக்களை மீளக்குடியமர்த்தியும்; உள்ளோம். அத்துடன், படைத்தரப்பினர் வசமிருந்த பல காணிகள் மற்றும் வீடுகளை விடுவித்து உரியவர்களிடம் கொடுத்திருந்தோம்.

ஆனால் தற்போது ஆட்சி அதிகாரத்தில் நாம் இல்லாத போதிலும் இந்த மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் நாம் மிகுந்த கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றோம்.

குறிப்பாக மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்ற எமது நிலைப்பாட்டில் இந்த மக்களை அவர்களது சொந்;த இடங்களில் மீளக்குடியமர்த்த வேண்டும் என்று புதிய அரசிடமும் கோரிக்கைகளை நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

இந்நிலையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி புதிய அரசை நாமே கொண்டுவந்தோhம் என்று கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான் தற்போது இந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்த அக்கறையுடன் செயற்பட வேண்டும். நாம் எந்த வேளையிலும் மக்களைவிட்டு ஓடியதும் இல்லை. மக்களைக் கைவிட்டதும் இல்லை. தொடர்ந்தும் மக்களுடன் இருந்து மக்களுக்கான சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.

அந்த வகையில் கடந்த காலத்தில் யுத்தத்தை நடத்திய அரசிடமிருந்து நாம் மக்களுக்கான உதவிகளை முழுமையாக எதிர்பார்த்திருந்திருக்க முடியாது. இருந்தும் எமது முயற்சிகளால் பல்வேறுபட்ட தேவைகளை குறித்த பிரதேச மக்களுக்கு செய்து கொடுத்துள்ளோம். அந்த வகையில்தான் குடாநாட்டிலுள்ள நலன்புரி முகாம்களில் வாழும் மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கு எம்மாலான முழுமையான ஒத்துழைப்பையும் ஒத்தாசையையும் வழங்க தயாராக இருக்கின்றோம் எனவும் தெரிவித்திருந்தார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை பார்வையிடச்சென்ற டக்ளஸ் தேவானந்தாவை கண்டதும் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் வரவேற்றிருந்த அதேவேளை தமது கோரிக்கைகளடங்கிய மனுவையும் கையளித்தனர்.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பை விடுத்து எங்களை மீளக்குடியமர்த்து, முகாம் வாழ்க்கை எமக்கு வேண்டாம், சொந்த இடங்களில் வாழவிடு, அரசே எங்கள் காணிகளை எங்களிடம் தா!, எமது மீன்பிடி துறைமுகம் எமக்கு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்களடங்கிய சுலோக அட்டைகளை தாங்கியவாறு காணப்பட்டனர்.

இன்றைய உண்ணாவிரத போராட்டத்தை சபாபதி மற்றும் கண்ணகி நலன்புரி முகாம்க
ளை சேர்ந்த மக்கள் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், எதிர்வரும் நாட்களில் ஏனைய நலன்புரி முகாம்களிலுள்ள மக்களும் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

இதன்போது டக்ளஸ் தேவானந்தாவுடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்

Related posts: