தேர்தல்கால பெறுபேறுகளை கொண்டு மக்களது அபிலாஷைகளை புறந்தள்ளப் போவதில்லை –  வவுனியாவில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, May 1st, 2018

கடந்த காலங்களில் எமது மக்களுக்கு சரியான  அரசியல் வழிநடத்தல் கிடைத்திருந்தால் நிச்சயமாக ஒளிமயமான வாழ்க்கை நிலையை அடைந்திருப்பர். ஆனால் தவறான அரசியல் தலைமைகளிடம் தமது அரசியல் அதிகாரங்களை தமிழ் மக்கள் கொடுத்து வந்துள்ளமையால்தான் இன்றும் சிறந்த வாழ்க்கை நிலையை அடையமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்குள் இருக்கவேண்டியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்திற்கான வியஜம் ஒன்றை இன்றையதினம் மேற்கொண்டுள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறித்த மாவட்ட நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இம்மாவட்டத்தின் தேர்தல் கால பெறுபேறுகளை கொண்டு நாம் எமது மக்களது அபிலாஷைகளை ஏமாற்றவோ புறந்தள்ளவோ விரும்பவில்லை. அத்துடன் ஒருபோதும் போலித் தேசியவாதம் பேசி நடைமுறை சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கி மக்களை நடுவீதியில் விடவும் நாம் தயாரில்லை.

எமது மக்களுக்கு சுபீட்சமானதும் அமைதியானதுமான வாழ்க்கை நிலையை உருவாக்கிக் கொடுப்பதற்கான சரியான பாதையை இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட காலத்திலிருந்து எடுத்துக் கூறிவருகின்றோம். அந்தவகையில் மக்களின் வளமான எதிர்காலத்துக்கு சரியான தலைமைத்துவத்தை கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோம்.

கடந்தகாலங்களில் யுத்தத்தை நடத்திய யுத்தத்தை வென்ற அரசுகளுடன் நான் இணக்க அரசியலை மேற்கொண்டு மக்களுக்கு பலவிதமான அபிவிருத்தி சார்ந்த பணிகளை முன்னெடுத்திருக்கின்றேன்.

அந்தவகையில் சக தமிழ் அரசியல் தரப்பினரது அரசியல் முன்னெடுப்புகள் யாவும் தோல்வி கண்டுவருகின்றமைக்கு அவர்களது தவறான வழிநடத்தலே காரணமாக இருந்துள்ளது என்பதை இன்றுள்ள அரசியல் நிலைமைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றதை இன்று மக்கள் உணர்ந்துள்ளனர்.

அந்தவகையில் கடந்த கால அனுபவங்களிலிருந்துதான் எதிர்கால வாழ்வு நிச்சயம் செய்யப்படுகின்றது என்பதற்கிணங்க இம்மாவட்டத்தினதும் மக்களதும் வளமான வாழ்வியல் முன்னேற்றத்திற்காக எமது கட்சியின் கொள்கைவழிநின்று மக்கள் பணிகளுக்காக உறுதியுடன் உழைப்போம் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

மக்களின் நலன்களை பாதுகாக்கும் தனித்துவமான நாடாகவே இலங்கை இருக்கும் – வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவ...
கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி - அமைச்சர் டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்ப...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளவத்தை மயூராபதி அம்மன் ஆலயத்தில் அமைச்சர் டக்ளஸ் விசேட பூஜை வழிபாடு...