தேசிய பாதுகாப்பும் தேசிய நல்லிணக்கமும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Friday, May 24th, 2019


கடந்த 30 வருட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், சில வருடங்களாக பொதுமக்கள் பாதுகாப்பு என்ற விடயம் மக்கள் உணர்வுபூர்வமாக அறிகின்ற வகையில் இருந்து, அதன் பின்னர் படிப்படியாக அந்த விடயமானது மக்கள் மத்தியிலிருந்து அகன்றுவிட்டதற்கு நாட்டில் வளர்ச்சி பெற்று வந்திருந்த இயல்பு நிலைமைகள் காரணமாக இருந்திருக்கலாம்.

என்றாலும், எமது மக்களின்  சொந்த காணி, நிலங்களை விடுவிக்கக் கோரிய போதிலும், படையினரை அந்தந்த மாவட்டங்களின் சனத் தொகைக்கும், இன விகிதாசாரத்திற்கும் ஏற்ற வகையில் நிலை கொள்ளச் செய்யுமாறும், தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கோரிய போதிலும், காணாமல் போனோர் தொடர்பிலும் தேசிய பாதுகாப்பு என்ற விடயமே முன்வைக்கப்பட்டு வந்திருந்ததை நாம் மறந்து விடவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நாங்கள் இத்தகைய கோரிக்கைகளைத் தொடர்ந்து முன்வைத்திருந்த போது, ஒரு விடயத்தை எப்போதும் அழுத்தமாகவே கூறியிருந்தோம். அதாவது, தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறே நாம் வலியுறுத்தி வந்திருந்தோம் என்பதை நான் மீண்டும் இந்தச் சந்தர்ப்பத்திலே நினைவூட்ட விரும்புகின்றேன். தேசிய பாதுகாப்பும்,  தேசிய நல்லிணக்கமும் ஒன்றோடு ஒன்று பிணைந்ததாகும். இதில் ஒன்றைவிட்டு, இன்னொன்றை கட்டியெழுப்புவது என்பது சாத்தியமானதல்ல. இரண்டையும் சமமான வகையில் கட்டியெழுப்பியிருக்க வேண்டும். 

நாட்டில் உள்நாட்டு யுத்தமொன்று இடம்பெற்று, முடிவுற்றதன் பின்னரான காலகட்டத்தில் அதன் பிரதிபலனாக இரு வேறு இனங்களிடையே கசப்பான உணர்வுகள் பரவியிருந்த நிலையில், நிலை மாறு காலகட்டமாக அக்காலகட்டத்தை மாற்றுவதற்கு தேசிய நல்லிணக்கம் போன்ற வேலைத் திட்டங்கள் அவசியமாகும் என்றாலும், தேசிய பாதுகாப்பு என்பது நாட்டில் இனங்களுக்கிடையே சமத்துவம் சாதானம் உறுதிபடுத்தப்பட்டிருந்தால் தான் அது சாத்தியமாகும் என்பதற்கும் இந்த நாட்டில் நிறையவே பாடங்களை நாம் கற்றிருக்கின்றோம்.

என்றாலும், தேசிய பாதுகாப்பு என்ற வகையில் யுத்த முடிவுக்குப் பின்னர், வடக்கிலே தொடர்ந்தும் காட்டப்பட்டு வந்த கரிசனை என்கின்ற பெயரிலான ஏற்பாடுகள், எமது மக்களின் வாழ்க்கை முன்னெடுப்புகளில் பல்வேறு இடையூறுகளை  ஏற்படுத்தி வந்திருந்த நிலையிலும், மறுபக்கத்தில் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகமான போதைப் பொருள் கடத்தல்கள் போன்ற செயற்பாடுகளும், சமூகச் சிர்கேடுகளான வாள் வெட்டுச் சம்பவங்களும், சிறு, சிறு கொள்ளைச் சம்பவங்களும் பெருவாரியாகவே தடுக்கப்படாத நிலைமையையும் காணக் கூடியதாகவே இருந்தது.

இத்தகைய வகையில் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான பாரதூரமான பொறுப்புகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத நிலையிலேயே ஏப்ரல் 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், அதன் பின்னரான நிலைமைகளை உடனடியாக கட்டுப்பாட்டக்குள் கொண்டு வர முடிந்ததையிட்டு, திருப்பதியடைய முடிகின்றது.

ஆனால், அதன் பின்னர் சில வாரங்கள் கழிந்த நிலையில், சிலாபம், மினுவாங்கொடை மற்றும் குருனாகல் மாவட்டத்தில் பல இடங்கள் என தொடர்ந்திருந்த வன்முறைகள் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அந்த வன்முறைகளை மேற்கொண்டிருந்த நிலையிலும் மக்கள் பாதுகாப்பு என்பது மூட்டை கட்டி ஒரு பக்கத்தில் வைக்கப்பட்டிருந்ததா? என்ற கேள்வி எமது மக்கள் மத்தியில் எழுந்திருந்தது.

அதன் பின்னர், மீண்டும் கைதுகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் என தொடர்ந்திருந்ததையும் காணக் கூடியதாக இருக்கின்றது. தற்கொலைத் தாக்குதலை நடத்தியவர்கள் முஸ்லிம் மக்களாக இந்த நாட்டில் வாழ்கின்றவர்களில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் என்பது தெளிவாகின்றது. தற்கொலைத் தாக்குதலில் அதிகம் உயிரிழந்த மக்கள் தரப்பினராக கிறிஸ்தவ மக்கள் இருந்துள்ளனர்.

மேற்படி தாக்குலானது மதவாதத் தாக்குதல் போன்ற தோற்றப்பாட்டினை எடுத்துக் காட்டினாலும், இதுவொரு சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தாக்குதல் என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தாக்குதலின் பின்னரான நிலைமைகள் இனவாதமான முறையில் தோற்றம் பெற்று வருவதை தடுப்பதற்கு நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts:

வடக்கு, கிழக்கு கலைஞர்கள் கௌரவிக்கப்படுவதுடன் விஷேட ஏற்பாட்டில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண...
தோழர் விக்னராஜா வேதநாயகத்தின் புகழுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி மரியாத...
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்த...

சக அரசியல் கட்சிகளை நான் விமர்சிப்பதென்பது காழ்ப்பு ணர்ச்சி காரணமாக அல்ல: அவர்கள் வரலாற்றில் விட்ட த...
பயிர்களின் விளைச்சலை மட்டுமல்ல கற்கும் கல்வியின் விளைச்சலையும் சிறப்பாக அறுவடை செய்ய வேண்டும் - மாண...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மனித நேயத்துக்கு சாந்தனின் உறவுகள் நேரில் சென்று நன்றி தெரிவிப்பு!