தாயகம் திரும்பும் தமிழ் அகதிகள் குடியேற காணி, வீட்டு வசதிகள் தேவை! – டக்ளஸ் தேவானந்தா

தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் தங்கியுள்ள எமது மக்கள் படிப்படியாக தாயகம் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு காணிகளற்ற மற்றும் அவர்களது காணிகளை அடையாளங்காண இயலாத காரணங்களால், வீட்டு வசதிகள் கிடைக்கப்பெறாமல் பரிதவித்து வருவதாக அறியக் கிடைத்துள்ளது. இவர்களது மீள்குடியேற்றம் தொடர்பில் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன். இவர்களது மீள்குடியேற்றம் குறித்து உரிய அவதானத்தைச் செலுத்தி உரிய செயற்பாடுகளை எடுக்க இந்த அரசும், இந்த அரசை தாங்களே கொண்டுவந்தவர்களென மார்தட்டிக் கொண்டு, இந்த அரசுடன் இணக்க அரசியல்; நடத்தும் தமிழ்த் தலைமைகளும் முன்வர வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், தமிழ்நாட்டு அகதி முகாம்களில் இன்னும் சுமார் ஒரு இலட்சம் இலங்கைத் தமிழ் மக்கள் தங்கியுள்ளனர். அங்கே இவர்கள் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான பிரச்சினைகளுக்கு நாளாந்தம் முகங்கொடுத்து வருவதாக நாளாந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறானதொரு சூழலில் தாயகம் திரும்பிவரும் இம் மக்கள் இங்கு வந்ததும் குடியிருக்க அடிப்படை ஏற்பாடுகள் ஏதுமற்ற நிலையில் பரிதவிக்கும் நிலை தவிர்க்கப்படல் வேண்டும். எமது மக்களின் மீள்குடியேற்றம் எனும்போது, இடம்பெயர்ந்து எமது நாட்டுக்குள் வாழும் மக்கள் மாத்திரமல்ல, புலம்பெயர்ந்துள்ள ஏனைய அனைத்து மக்களையும் மீள்குடியேற்றுவதாக அத் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
எனவே, தமிழ்நாட்டிலிருந்து தாயகம் திரும்பும் மக்கள் இன்று இருந்த இடமும் இல்லாமல் வந்த இடத்திலும் வாழ வசதியில்லாமல் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனை இந்த அரசும், இந்த அரசை கொண்டு வந்தவர்கள் தாங்களே என மார்தட்டிக்கொண்டு, தனி நபர் பெருமைக்காக இணக்க அரசியல் நடத்திவரும் தமிழ்த் தலைமைகளும் அவதானத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழகத்துடனான இராஜதந்திர உறவுகள் தேவை - டக்ளஸ் தேவானந்தா!
சிறந்த அரசியல் சூழ்நிலை உருவாக்கப்படும் போதுதான் சமூக சீரழிவுகளைக் கட்டுப்படுத்த முடியும் - செயலாளர்...
பேலியகொடை மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் - கழிவகற்றல் செயற்பாடுகள் தொடர்பில் அவதானம்!
|
|