தமிழ் மொழி பாடநூல்களில் காணப்படும் தவறுகளுக்கு இன்னும் தீர்வு வழங்கப்படாதிருக்கிறது – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Friday, March 15th, 2019

தமிழ் மொழி மூலமான பாடசாலை பாடநூல்களில் காணப்படுகின்ற கருத்துப் பிழைகள், எழுத்துப் பிழைகள், பிழையான தகவல்கள், பொருத்தமற்ற விடயங்கள், மூடிமறைப்புகள், போன்ற பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் நான் பல தடவைகள் சுட்டிக்காட்டி வந்துள்ளேன்.

இறுதியாக தமிழ் மொழி மூல வரலாற்றுப் பாடநூல்கள் தொடர்பில் நான் இந்தச் சபையில் கேள்வி தொடுத்திருந்த நிலையில், அதற்கென மீண்டும் ஒரு கலந்துரையாடலை மேற்கொள்வோம் என கௌரவ கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார். அது தொடர்பில் இன்னும் ஒரு தீர்மானமில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கல்வி, நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வி ஆகிய அமைச்சுக்கள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

ஒரு நாட்டின் உண்மையான வரலாற்றை குறுகிய அரசியலுக்காக யாரும் மூடி மறைத்தாலும், அதனை இந்த நாட்டு வரலாற்றிலிருந்து மறைத்துவிட முடியாது. மாணவர்கள் பெற வேண்டிய கல்வியில் இத்தகைய வரலாற்று மூடி மறைப்புகளை மேற்கொண்டு, தமிழ் மட்டுமல்ல சிங்கள மொழி மூல மாணவச் சமூகத்திற்கும் இந்த நாட்டில் துரோகமே இழைக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத் திட்டத்தின் பிரகாரம் 2019ஆம் ஆண்டிலிருந்து நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்கான வணிகப் பிரிவு தொடர்பில் தேசிய கல்வி நிறுவகத்தால் வெளியிடப்பட்டுள்ள தமிழ் மொழி மூலமான வணிகக் கல்விக்கான புதிய ஆசிரியர் வழிகாட்டிக் கைநூலில் கருத்துப் பிழைகளும், ஆங்கில மொழி மூலமான தவறுகளும், பிழையான கலைச் சொற்களும் இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், பாட நூல்கள் தயாரிப்பிலிருந்து, பாடசாலை மட்ட வளங்கள் வரையில் தமிழ் மொழி மூலமான கல்வித்துறையானது இந்த நாட்டில் பாரிய பின்னடைவினையே கொண்டிருக்கின்றது.

மலையகத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கும் தமிழ் மொழி மூல கல்வியில் பல்வேறு தடைகள் இருப்பதைக் காணக்கூடியதாகவே இருக்கின்றது.

இரத்தினபுரி மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் 97 தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் இருக்கின்றன. சுமார் 1 இலட்சத்து 12 ஆயிரம் தமிழ் மக்கள் அங்கு வாழ்கின்றனர். அங்கே கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர வகுப்பில் கணித, விஞ்ஞான பாடங்களைக் கற்பிக்கின்ற வகையில் ஒரு பாடசாலைகூட கிடையாது எனத் தெரிய வருகின்றது. பதுளை மாவட்டத்திலும் இத்தகைய நிலையே நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்படியே தமிழ் மொழி மூலக் கல்வித்துறை குறித்து நிறையவே விடயங்கள் இருக்கின்றன. எனினும் நேரம் கருதி அவை அனைத்தையும் இங்கு குறிப்பிட இயலாமல் இருக்கின்றது. எனவே, இத்தகைய குறைபாடுகள், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கௌரவ கல்வி அமைச்சர் மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts: