தமிழரின் பிரச்சினை தீர்ந்துவிட்டால் கூட்டமைப்பிற்கு பிழைப்புக்கே வழியிருக்காது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. விஷேட அறிக்கை!

Thursday, August 8th, 2019

“கொம்பு மாடு முட்டி கோபுரம் சரிவதில்லை” மல்லாந்து படுத்துக்கிடந்து காறி உமிழ்வதால் சூரியன் ஒருபோதும் அழுக்குப்படுவதும் இல்லை. அது போலவே மாபெரும் அர்ப்பணங்களாலும் ஆழ்மன இலட்சிய வேட்கையினாலும் கட்டியெழுப்பப்பட்ட எமது தியாக வரலாற்றை அரசியல் காழ்ப்புணர்ச்சியில் இருந்து உருவாகும் அவதூறுகளால் ஒரு போதும் அசிங்கப்படுத்திவிட முடியாது. ஆனாலும்.. உண்மைகள் கண்டறியப்பட்டு எமது மக்கள் மேலும் தெளிவடைய வேண்டும் என்பதற்காகவே நான் இந்தச் சபையில் சில விடயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் 31.07.2019 இல் தனது உரையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தொடர்பான கூறிய அவதூறுகளுக்குப் பதிலளிக்கும் முகமாக உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

1990ஆம் ஆண்டு யாழ் தீவுப்பகுதியைப் படையினர் விடுவித்த போது அங்கு சென்று எந்தவொரு தமிழ்க் கட்சிகளும் எமது மக்களுக்குப் பணியாற்ற விரும்பியிருக்கவில்லை. ஆனாலும் நாம் மட்டும் பலத்த சவால்களுக்கு மத்தியிலும் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் முதன் முதலாக தீவக மண்ணில் கால் பதித்திருந்தோம்…

பசுமை நிறைந்த எம் பாசமிகு தீவக மண் அழிவுப்போரில் சரிந்த எமது மக்களின் குருதியில் நனைத்து சிவந்த போது,.. கேந்திர முக்கியத்துவம் இல்லாத இடமென்று கூறி எல்லோராலும் கைவிடப்பட்டு தீவக மக்கள் தவித்திருந்த போது,.. எமது மக்களின் அழுகுரல் கேட்டு நாம் அன்று தீவகம் நோக்கி சென்றிருக்கா விட்டால்,… இன்னும் பல மக்கள் குருதியில் அன்று சரிந்திருப்பார்கள். இன்னும் பல தமிழ் இளைஞர்கள் அன்று காணாமல் போயிருப்பார்கள்.

எங்கும் நிசப்தம்! வீதிகள் எங்கும் எமது மக்களுக்கு பரீட்சயம் இல்லாத மொழியில் படையினர் எழுப்பிய சப்தம் மட்டும் கேட்டது. வீதியில் இறங்க அச்சப்பட்டு, கதவுகள் பூட்டி எமது மக்கள் வீடுகளில் ஒளிந்திருந்தனர்…

அம்மா!,,, நாங்கள் வந்திருக்கின்றோம்.. என்று கூறிக் கதவுகளை நாம் தட்டிய போது,. தமிழ் குரல் கேட்ட சந்தோச மிகுதியில் வீதியில் வந்து நம்பிக்கையுடன் உலாவத் தொடங்கினர் எமது தீவக மக்கள். அன்று நாம் தீவகத்தில் இல்லாதிருந்தால் பட்டினிச் சாவிலேயே அந்த மக்கள் இறந்திருப்பார்கள். எமது மக்களுக்கு ஒரு பிடி அரிசிகூடக் கொடுத்தறியா தமிழ்க் கட்சித் தலைமைகளுக்கு மத்தியில்,.. எனது முதுகில் உணவு மூட்டைகள் சுமந்து என் தோழர்களுடன் நானும் ஒருவனாகச் சென்றிருந்தேன்… பட்டினிச் சாவில் இருந்தும் அன்று தீவக மக்களைக் காத்தவர்கள் நாங்கள். அவலங்களில் இருந்தும் மீட்டவர்கள் நாங்கள்!

இன்று எம்மீது அவதூறு பொழிவோர்கள் அன்று எங்கே சென்றிருந்தார்கள்?.. 1996இல் யாழ் குடாநாட்டைப் படையினர் விடுவித்த போது எமது மக்கள் அவலப்பெருங்காட்டில் அந்தரித்து நின்றனர். அப்போது நாங்கள் எமது மக்களைக் காக்க யாழ் செல்ல வேண்டும் என அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் அரசைக் கேட்டிருந்தோம். புலிகளையோ வேறு எவரையுமோ யாழ் மக்கள் விரும்பவில்லை என அவர் பதிலளித்து மறுத்தார்…

புலியை யாழ் மக்கள் விரும்பவில்லை என்றால் சிங்கத்தையும் யாழ் மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று நான் கூறியிருந்தேன். அக்காலத்தில் யாழ் நோக்கி அமைச்சர் ஒருவர் சென்றிருந்தார். அவர் மீது தற்கொலைத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றது. அதில் அப்பாவி மக்களும் கொல்லப்பட்டார்கள். அப்போது பி.பி.சி நிருபர் ஆனந்தி என்னிடம் அது குறித்துக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கான எனது பதிலாகப் படையினர் மக்களுடன் சாதாரண நேரங்களில் சகஜமாகப் பேசுவார்கள். ஆனாலும் யுத்தம் என்றோ அல்லது ஒரு தாக்குதல் என்றோ வரும்போது பதிலுக்குத் தாம் படையினர் என்பதையே நிரூபிப்பார்கள். இதற்கு சக தமிழ்த் தரப்பினரும் விதிவிலக்காக நடந்தவர்கள் அல்ல. குளவிக்கூட்டுக்குக் கல்லால் எறிந்தால் குளவிகள் கொட்டும் என்று நான் பதில் கூறியிருந்தேன்.

அந்தத் தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னரே அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருடன் வாதாடி நாங்கள் யாழ்குடா நாட்டிலும் கால் பதித்தோம். அவலப்பட்டு நின்ற எமது மக்கள் பெருமளவில் திரண்டு எம்மைத் தேடி வந்தனர். தாம் இதுவரை மாவீரர்களின் கல்லறைகளுக்குத் தீபம் ஏற்றியவர்கள் என்றும், ஆனாலும், எம்மிடம் இன்று நம்பிக்கையோடு தாம் வந்திருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள். மனந்திறந்து பேசிய எமது மக்களை நான் ஆரத்தழுவி அன்பு காட்டி வரவேற்றேன். அவர்கள் புலியோ அன்றி வேறெவரோ என்று பேதம் பார்க்காமல் அனைவரும் தமிழர் என்ற அடிப்படையில் அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தேன்.

காணமல் போனவர்களுக்கும், படுகொலை செய்யப்பட்டு செம்மணிப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டவர்களுக்கும் நீதி விசாரணை வேண்டும் என்று குரல் எழுப்பினோம். காணாமல் போன எமது தமிழ் உறவுகள் அறுநூற்றி ஐம்பது பேர்களின் பெயர்ப் பட்டியலைத் தயாரித்தோம். காணாமல் போனோர் பெற்றோர் பாதுகாவலர் சங்கத்தை உருவாக்கினோம். அந்த அமைப்பின் ஊடாக வெகுஜனப் போராட்டங்களை முதன் முதலில் தொடக்கி வைத்தேன்…

படையினரின் பிரசன்னத்தின் மத்தியிலும் வெகுஜனப் போராட்டங்களை நடத்தும் துணிச்சலை எமது மக்களுக்கு முதன் முதலில் அன்றே ஊட்டியவர்கள் நாங்கள்!… காணாமல் போனோர் பட்டியலை ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருக்கும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் சமர்ப்பித்தோம். நாடாளுமன்றத்தில் மட்டுமன்றி சர்வதேச அரங்கிலும் குரல் கொடுத்தோம். அவைகளை அம்பலப்படுத்தினோம். அதன் மூலம் காணாமல் போதல்களையும் கைதுகளையும் முடிந்தளவு கட்டுப்படுத்தினோம்…

அப்போது,.. இன்று எம்மீது அவதூறு பொழிபவர்கள் எங்கே சென்றிருந்தார்கள்?.. 1996 செப்டம்பர் 07இல் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி விவகாரம் குறித்து நாமே அதை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தி இருந்ததோம். 1998 ஜுலை 03ஆம் திகதி கிருசாந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இராணுவச் சிப்பாய் சோமரத்தின ராஜபக்ச என்பவருக்கு மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் நாம் பெரும் பங்காற்றியிருக்கிறோம்.

அதே போல்,. 1999 டிசம்பர் 28ஆம் திகதி படையினரால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு சாரதாம்பாள் விடயம் குறித்தும், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி அம்பலபப்டுத்தியதோடு மட்டுமன்றி அந்த இறுதிக்கிரிகையைக்கூட ஒரு கண்டன நிகழ்வாக நாமே நடத்தியும் இருந்தோம். அது மட்டுமன்றி 17.05.1997இல் அம்பாறையில் கோணேஸ்வரி என்ற தமிழ் யுவதி படையினரால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட போதும்  நாமே நாடாளுமன்றத்தில் அதைக் கண்டித்துக் குரல் எழுப்பி   அம்பலப்படுத்தியிருந்தோம்…

மிருசுவில் கிராமத்தில் 2000ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் நாள் தமிழ் பச்சிளம் பிஞ்சுகள் உட்பட எமது மக்களில் எட்டுப்பேர்கள் படையினரால் படுகொலை செய்யப்பட்டார்கள். அன்று அந்த கோரப்படுகொலைச் சம்பவத்தில் இருந்து தப்பி வந்த பொன்னுத்துரை மகேஸ்வரன் என்பவர் அடைக்கலம் தேடி வேறெங்கும் சென்றிருக்கவில்லை.  எமது அலுவலகம் நோக்கியே அவர் ஓடி வந்திருந்தார். இன்று எம்மீது அவதூறுகள் பரப்புவோர் கூறுவது உண்மையென்றால் அன்று மிருசுவில் படுகொலையில் இருந்து தப்பித்து வந்தவர் எமது அலுவலகம் தேடி வந்திருக்கவே மாட்டார். சாட்சி சொல்ல அச்சப்பட்டு அந்த நபர் நின்ற போது, அவரைப்  பாதுகாத்து வைத்திருந்து நீதிமன்றத்திற்குக்கூட நாமே பாதுகாப்பாக அழைத்துச் சென்று வந்திருக்கிறோம். அவருக்குச் சாட்சி சொல்லும் துணிச்சலை நாம் கொடுத்திருந்தோம்.

இதன் காரணமாகவே  சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரியான சுனில் ரத்தினாயக்கா என்பவருக்கு மரணதண்டனைத்  தீர்ப்பும் வழங்கப்பட்டது. அது மட்டுமன்றி யுத்த காலத்தில் கைதுசெய்யப்பட்ட பலநூறு இளைஞர் யுவதிகளைச் சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் ஊடாக மனித கௌரவத்திற்கான மன்றம் அமைத்து இலவச சட்ட ஆலோசனை வழங்கி,.. அவர்களை சிறை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தவர்களும் நாம் மட்டுமே.

சிறைக்கைதிகளை மீட்பது மட்டுமன்றி,.. காணி சுவீகரிகரிப்புகளைத் தடுத்து நிறுத்துவது, புனர்;வாழ்வு, புனரமைப்பு, வேலைவாய்ப்பு, அபிவிருத்தி அன்றாட அவலங்களுக்கான தீர்வு, அது மட்டுமன்றி அரசியல் தீர்வு என எமது மக்களின் அனைத்து அபிலாசைகளையும் தீர்ப்பதற்காகவே அன்றும் நாம் எமது மக்களுடன் நின்றிருந்தோம்.

எம் தலைகளுக்கு மேலாகச் செல் வீச்சுக்கள் நடத்தப்பட்ட போதும், கால்களின் கீழே கண்ணிவெடிகள் புதைக்கப்படிருந்த போதும், துப்பாக்கிகளும், மனித வெடி குண்டுகளும் எம்மை அச்சுறுத்திய போதும்கூட நாம் அன்று மக்கள் மத்தியில் நின்றிருந்தது அழிவு யுத்தத்தில் அவலப்பட்டு நின்ற எமது மக்களை காபதற்காகவே… எம்மீது அர்த்தமற்ற வகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் பெயரால் அவதூறுகளைப் பரப்பி வரும் பொறுப்பற்ற தமிழ் அரசியல் கட்சிகள் போல், எமது மக்கள் அவலப் பெருங்காட்டில் அந்தரித்து நின்ற போது நாமும் கொழும்பிலும் தமிழ் நாட்டிலும், வெளிநாட்டிலும் உல்லாச வாழ்க்கை நடத்திக்கொண்டு இருந்திருந்தால்,..

இவ்வாறான பழிகளை எம்மீது எவராலும் சுமத்தியிருக்க முடியாது. வலி சுமந்த மக்களுடன் என்றும் நாம் நின்றவர்கள் என்பதாலேயே இன்று நாம் பழி சுமந்து நிற்கிறோம். பாவம் ஒரு பக்கம். பழி இன்னொரு பக்கம். இதுவரை எம்மீது சுமத்தப்பட்டு வந்த பல்வேறு பழிகளில் இருந்து வரலாறு எம்மை விடுவித்து வந்திருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் எம்மீது சுமத்தியிருக்கும் அவதூறுகளை உண்மையென அவர் ஒப்புவிக்க முடியுமானால்,… வெறுமனே கூச்சலிட்டுக்கொண்டிருக்காமல்  உங்களுடைய அரசு, நீஙகள் கொண்டு வந்த ஆட்சி என்று கூறும் நீங்கள் அதை வைத்து ஏன் உங்களால் எம்மீதான ஒரு நீதிவிசாரணையை நடத்த முடியாமல் இருக்கின்றீர்கள்?

தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விட்டால் நீங்கள் வாக்குகளை அபகரித்து அரசியல் பிழைப்பு நடத்தக் காரணங்கள் இல்லாமல் போய் விடும். அது போலவே எம்மீது அடிக்கடி அவதூறு பரப்பும் நீங்கள் எம்மீதான நீதி விசாரணையை நடத்தி அதற்கு நியாத்தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டால் தொடந்தும் உங்களால் எம்மீது அவதூறுகளைப் பரப்பப் காரணம் இல்லாமல் போய் விடும். ஆகவேதான் உங்களால் எதையும் பேசிப் பிழைப்பு நடத்த மட்டும் முடியுமே தவிர, எதையும் சாதித்துக் காட்ட வக்கற்றவர்கள் என்பதையே நீங்கள் மெய்ப்பித்து வருகிறீர்கள்.

உங்கள் அரசியல் பலத்தை வைத்து தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வைத்தான் உங்களால் காண முடியவில்லை.

அதே அரசியல் பலத்தை வைத்து அடுத்தவர் மீதான உங்கள் அவதூறுகளுக்கு ஒரு நீதிவிசாரணையை ஆவது நீங்கள் நடத்திக்காட்டலாமே என்றுதான் உங்களிடம் சவால் விடுத்துக் கேட்கிறேன். நான் தயாராகவே இருக்கின்றேன். நடத்துங்கள் நீதி விசாரணையை!…

அடுத்தவர்கள் மீது அவதூறு பரப்பும் இவர்கள் அதற்கு ஆதாரம் கேட்டால் துணைக்கு அழைப்பது விக்கி லீக்ஸ் இணையத்தையும் தமது பினாமி ஊடகங்களையுமே. மேற்குலக வெளிநாட்டு இராஜதந்திரிகள் இங்கு வருவார்கள். இலங்கையில் என்ன நடக்கின்றது என்று அவர்களில் சிலர் நேரில் எங்கும் சென்று ஆராய்வதில்லை. தாம் சந்திக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் அவிழ்த்துவிடும் அடுத்தவர்கள் மீதான அவதூறுகளையே தாம் திரட்டும் தகவல் என்று கூறித் தத்தமது நாடுகளுக்கு சில ராஜதந்திரிகளை அனுப்புவார்கள்.

அந்தத் தகவல்களைத் திருடியே விக்கிலீக்ஸ் வெளியிட்டுப் பரபரப்புக் காட்டும்! ஆகவே எம்மீது சேறடித்து தோற்றுப்போன விக்கிலீக்ஸ் செய்தியாளர்களான தமிழ் கட்சித் தரகர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். தமிழரின் விடுதலைக்காக சிறு இறகைக்கூட இழந்திருக்காத கூரைக்கோழிகள், இன்று புலிகளின் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்துவது ஏன் என்று கேட்கிறேன். மனித குல நாகரீகமே வெட்கித் தலைகுனியும் வகையில் கிளிநொச்சியில் சமூகச் சீரழிவில் ஈடுபட்டுப் புலிகள் இயக்கத்தால் கைது செய்யப்பட்ட இவர் இன்று தானும் ஒரு புலி என்று கூறி மக்களுக்கு புலுடா விடலாமா என்று நான் கேட்கிறேன்.

அண்ணன் தங்கை, அப்பு ஆச்சி, பாட்டன் பூட்டி, கட்டி வளர்த்த தமிழர் பண்பாட்டின் பாரம்பரியத்தையே வெட்கித் தலைகுனிய வைத்த விறகுக்கட்டை வீரன்;. தமிழர் பண்பாடு குறித்தும், தமிழ் தேசியம் குறித்தும் பேச அருகதை உள்ளவரா என நான் கேட்கிறேன். புலிகளின் பயிற்சிப் பாசறையில் இருந்து தப்பி வருவதற்கு அவர் அதற்குப் பரிகாரமாகத் தன்னிடம் கல்விகற்ற மாணவச் செல்வங்களைப் பயிற்சி முகாமில் பணயம் வைத்துவிட்டு வந்திருந்தார். இது யுத்தக்குற்றம் இல்லையா என்று கேட்கிறேன்.

சந்தர்ப்பம் பார்த்துப் புலிகளிடமிருந்து தப்பி வந்த அவர் பொதுமக்களிடம் இருந்து சேகரித்த தங்க நகைகளை அபகரித்து செஞ்சிலுவைச் சங்க வாகானத்தில் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் நுழைந்தாரே, அந்தத் தங்க நகைகள் எங்கே? அதற்கு விசாரணை இல்லையா என்று கேட்கிறேன். ஒரு புறம் புலி முகம்! மறு புறம் சிங்க முகம்!! இரட்டை முகவராகச் செயற்பட்டு, தன்னைக் கைது செய்த புலிகள் இயக்கத்தைப் பழிவாங்க செஞ்சோலைச் சிறுவர் இல்லத்தை புலிகளின் பயிற்சி முகாம் என அரசுக்கு தகவல் வழங்கியிருந்தார். இதற்கு நீதி விசாரணை இல்லையா என்று கேட்கிறேன்.

பலருக்கும் தெரியாத இரகசியம் 2009இல் இவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை திரை மறைவில் சந்திக்க முனைந்ததுதான். இன்றுகூடப் பேசுவது தமிழ் தேசியம்! திரை மறைவில் அரசுடன் நடத்துவது தேன்நிலவு.

இறுதியாக,.. உனது கண்களை மறைக்கும் மரக்குற்றியை அகற்றிக்கொள். பிறரது கண்களை மூடும் சிறு மரத்தூசிகள் உன் கண்களில் தெரியும். எம்மீது அவதூறு பரப்புவோருக்கு இதை நான் கூறிக்கொண்டு இத்துடன் முடித்தாலும் தொடரும் என்று கூறி இத்துடன் விடைபெறுகின்றேன்.

Related posts: