களுத்துறை கன்னங்கர பாடசாலை தமிழ்ப் பிரிவின் இன்றைய நிலை கவலைக்கிடமானது – டக்ளஸ் தேவானந்தா சபையில் தெரிவிப்பு!

Thursday, March 23rd, 2017

மத்துகம கன்னங்கர தேசிய சிங்களப் பாடசாலையுடன் இணைந்து இயங்கி வருகின்ற தமிழ்ப் பிரிவு பாடசாலையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கும், ஆசியர்கள் கல்வி கற்பிப்பதற்கும் உகந்த பௌதீக வள வசதிகளையும், சூழலையும் ஏற்படுத்துவதற்கும், மேற்படி பாடசாலையில் நிலவி வருகின்ற ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக, அப்பகுதியைச் சார்ந்த ஆசிரியர்களை நியமிப்பதற்கும், மேற்படி தமிழ்ப் பிரிவு பாடசாலையின் நிர்வாகப் பணிகளை, தமிழ்ப் பிரிவிற்கான அதிபரின் கீழ் கொண்டுவருவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கல்வி அமைச்சரிடம் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், களுத்தறை மாவட்டத்தில், மத்துகம பிரதேச செயலாளர் பிரிவில், மத்துகம நகரில் எமது நாட்டின் இலவசக் கல்வியின் தந்தையான சி. டப்ளியூ. டப்ளியூ. கன்னங்கர அவர்களது நாமத்தைக் கொண்டு இயங்கி வருகின்ற, கன்னங்கர தேசிய சிங்களப் பாடசாலையுடன் இணைந்ததாக 6ம் தரம்  முதல், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் வரையிலான தமிழ்ப் பிரிவொன்று இயங்கி வருவதாகவும், இது, ஆரம்பத்தில் மாலை நேரப் பாடசாலையாக இயங்கிவந்த நிலையில், 1998ம் ஆண்டு முதல் காலை நேரப் பாடசாலையாக இயங்கி வருவதாகவும், மேற்படி தேசிய பாடசாலை அமைந்துள்ள வளவில் இந்தத் தமிழ்ப் பிரிவு பாடசாலை ஒரு மூலையில் 100ஒ20 அளவிலான ஒரு பழைய கட்டிடத்திலும், அதனருகேயுள்ள ஒரு தற்காலிகக் கட்டிடத்திலுமே இயங்கி வருவதாகவும், இதனால் இட நெறுக்கடி மிக்கதாகக் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இதன் பிரகாரம், பழைய கட்டிடத்தில் 10ம், 11ம் தரங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்களும், இதே கட்டிடத்தில் தடுக்கப்பட்ட ஒரு மூலையில் 8ம், 9ம் தரங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவர்களும் கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில், இதே கட்டிடத்தின் இன்னொரு மூலையில் உள்ள ஒரு சிறிய அறையில் அலுவலகப் பணிகள், ஆசிரியர்களின் தேநீர், உணவு உண்ணல் போன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. இதனருகில் இதுவரையில் பூர்த்தி செய்யப்படாதுள்ள ஒரு தற்காலிகக் கட்டிடத்தில் 6ம், 7ம் தரங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளை மேற்;கொண்டு வருவதாகவும், இதனடிப்படையில் மொத்தமாக இப் பாடசாலையில் சுமார் 150 மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும், இங்கு மூன்று ஆசிரியர்கள் மாத்திரமே கடமையாற்றி வருவதாகவும் தெரிய வருகிறது.

இந்தப் பாடசாலை வரலாற்றில் இந்து சமயப் பாடத்திற்கென ஒரு ஆசிரியர் பணியில் இருந்த வரலாறே கிடையாது எனக் கூறப்படுகின்ற நிலையில், தற்போது விஞ்ஞானம், வரலாறு, தமிழ் மற்றும் இந்து சமயப் பாடங்களுக்கென ஆசிரியர்கள் இல்லை என்றும், அதே போன்று நூலக வசதிகள் மற்றும் இதர வசதிகள் எதுவும் இங்கு கிடையாது என்றும், மேற்படி தமிழ்ப் பாடசாலைக்கென ஒரு தமிழ் மொழி மூல அதிபர் கடமையில் இருந்தும், சிங்களப் பாடசாலை அதிபரின் நிர்வாகமே இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது.

இங்கு நிலவும் ஆசிரியர்களுக்கானப் பற்றாக்குறையை நிரப்ப கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ ராதாகிருஸ்ணன் அவர்கள் முயற்சி எடுத்து, கடந்த வருடம் ஒக்டோம்பர் மாதம் கல்வியிற் கல்லூரியில் இருந்து வெளியேறிய 8 ஆசிரியர்களை கல்வி அமைச்சின் மூலமாக நியமித்ததாகவும், எனினும், அதில் ஒருவரேனும் கடமையைப் பொறுப்பேற்க முன்வரவில்லை என்றும் கூறப்படுகின்றது. எனவே, இப் பாடசாலையின் இந்த நிலையை அவதானத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அசௌகரியங்களை எதிர்கொ ள்ளும் மக்களுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுத்தரவேண்டும் - ஆளுநரிடம் டக்ளஸ் தேவ...
மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!! இதில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை - நாடளுமன்றத்தில் ட...
நவராத்திரியை முன்னிட்டு பிரதமரால் ஒதுக்கப்பட்ட நிதிக்கான காசோலைகள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களா...