எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் எல்லை என்ன? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

எல்லை நிர்ணய ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவின் எல்லை என்ன? தேர்தலுக்கான வட்டாரங்கள் – தொகுதிகளை மாத்திரம் நிர்ணயம் செய்வதா? என்ற கேள்வி எழுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் அடங்கலாக 24 நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி மைத்திரிபாலவும் நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகி இருந்து உரைகளைக் கேட்டுக்கொண்டிருக்கையில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள்,
எமது பகுதிகளைப் பொறுத்தவரையில் வன இலாக்காவினர் வந்து எல்லைகளைப் போட்டு அது அவர்களுக்குரியது என காணிகளை ஒதுக்குகின்றனர். வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வந்து எல்லைகளைப் போட்டு அது அவர்களுக்குரியது என காணிகளை ஒதுக்குகின்றனர். தொல்பொருள் திணைக்களத்தினர் வந்து அது அவர்களுக்குரியது என காணிகளை ஒதுக்குகின்றனர். மகாவலி அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள் வந்து எல்லைகள் போட்டு, அது அவர்களுக்குரியது என காணிகளை ஒதுக்குகின்றனர்.
இந்த நிலையில், எமது மக்கள் எங்கே போய் குடியிருப்பது? எங்கே போய் தொழில் செய்வது? என்ற நிலை எமது பகுதிகளில் தோன்றியிருக்கின்றது.
இந்த நாட்டில், சுமார் மூன்று தசாப்த காலங்களாக பாரிய யுத்தம் ஒன்று நடந்தது என்பதையும், இதன் காரணமாக நேரடிப் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்த எமது மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தங்களது சொந்த காணி, நிலங்களைவிட்டு பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றனர் என்பதையும் நான் இங்கு புதிதாகக் கூற வேண்டியதில்லை.
அத்தகையதொரு நிலையில், எமது மக்களால் கைவிடப்பட்டிருந்த காணி, நிலங்கள் பல வருட கால பாவனை இன்றிய நிலையில், மரங்கள் வளர்ந்து, காடுகளாகிவிட்டுள்ளன. இவ்வாறு, காடுகள் வளர்ந்த இடங்கள் எல்லாம், வனத்துறைக்கு உரியது என்றும், எமது மக்களால் கைவிடப்பட்டிருந்த கால்நடைகள் நடமாடும் பகுதிகள் எல்லாம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு உரியது என்றும், எமது மக்களது வரலாற்று வழிபாட்டு இடங்களை எல்லாம் மூடி மறைத்துவிட்டு, அது தொல்பொருள் திணைக்களத்திற்கு உரியது என்றும் எல்லைகள் பல்வேறு துறையினராலும் போடப்பட்டு, கையகப்படுத்தப்பட்டால், எமது மக்கள் வேறு எங்கே போவது? என்றே கேட்க வேண்டியிருக்கின்றது.
இந்த நிலையில், ஒவ்வொரு துறையினரும் தாங்கள் விரும்பிய வகையில் எல்லைகளை நிர்ணயிக்கின்ற நாட்டில், எல்லை நிர்ணய சபை எதற்கு? என்ற கேள்வியே எமது மக்கள் மத்தியில் இன்று எழுந்துள்ளது.
அந்த வகையில் நாட்டின் அனைத்து எல்லைகள் நிர்ணயப் பணிகளும் மேற்படி ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரப்படல் வேண்டும் என்கின்ற அவசியம் தற்போதைய நிலையில் வலியுறுத்தப்படுவதாகவே காணப்படுகின்றது.
Related posts:
|
|