உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதும் மக்களோடு வாழ்ந்தவர்கள் நாம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, July 18th, 2018

இலங்கை – இந்திய ஒப்பந்தத்துடன் ஆயுதப் போராட்டத்தினைக் கைவிட்டு ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்குள் பிரவேசித்திருந்த எமக்கிருந்த பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக, அரச பாதுகாப்பினைப் பெற்றிருந்த நாம், இந்த சுயலாப அரசியல்வாதிகளைப் போல் வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒதுக்கிய நிலையில் வாழ்ந்திருக்கவில்லை. உயிருக்கு அச்சுறுத்தலான அந்தக் காலகட்டங்களிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களுடன் மக்களாக இருந்து, எமது மக்களின் அன்றாட பிரச்சினைகள் முதற்கொண்டு அடிப்படை பிரச்சினைகள் வரைத் தீர்த்தவர்கள் நாங்கள என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி திருத்தச் சட்டமூலம், காணி பாரதீனப்படுத்தல் மீதான கட்டுப்பாடுகள் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

‘முதலில் அரசியல் தீர்வு! அதன் பின்னரே அபிவிருத்தி’ என நாமும் அன்று கூறியிருந்தால், எமது மக்களில் பலர் அன்றே பட்டினியால் மாண்டிருப்பார்கள். இப்போது எமது மக்கள் இருக்கின்ற காணி, நிலங்கள்கூட அவர்களுக்குக் கிடைத்திருக்காது.  சமுர்த்தி போன்ற நிவாரணத் திட்டங்கள் அப்போதே எமது மக்களுக்கு எட்டியிருக்காது. அரச தொழில்வாய்ப்புகள் எமது மக்களுக்கு அப்போது கிட்டியிருக்காது. கல்வித்துறை, சுகாதாரத்துறை என்பன மண்ணோடு மண்ணாகிப் போயிருக்கும். சிவில் நிர்வாகம் என்பது மீள் உயிர்ப்புப் பெறாமல், எமது மக்கள் அன்றே மேலும், மேலும் பாதிக்கப்பட்டிருப்பர். அடக்கி, ஒடுக்கப்பட்டு இன்று ஓர் அடிமைச் சமூகமாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கக்கூடும்.

எமது மக்களுக்கு அரசியல் தீர்வு என்பது முக்கியமாகும். ஆனால், முக்கியமானது அது மட்டுமே அல்ல. அதுவும் முக்கியம். அன்றாட, அடிப்படை, அபிவிருத்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதும் முக்கியம் என்ற கொள்கை அடிப்படையிலேயே நாம் செயற்பட்டு வருகின்றோம்.

இதன் அடிப்படையிலேயே இன்று நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபை முறைமையினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து ஆரம்பித்து, படிப்படியாக முன்னேறிச் செல்லக்கூடிய வகையிலான அதிகாரப் பகிர்வையே முன்வைத்து நாம் எமது மக்களுக்கான அரசியல் தீரிவினை வலியுறுத்தி வருகின்றோம். இதை விடுத்து, சாத்தியமற்றவையின் பின்னால் ஓடிக் கொண்டு, காலத்தைக் கடத்துவதற்கு நாம் தயாராக இல்லை.

இத்தகையதொரு அரசியல் தீர்வு முறையினை எட்டுவதற்கு இந்த நாட்டில் சட்ட ரீதியாகவோ, நடைமுறை ரீதியாகவோ எவ்விதமான தடைகளும் இல்லை. எனவே, இந்த மாகாண சபை முறைமையினை வினைத்திறனுடன் செயற்படுத்தினால் எமது மக்களின் போதியளவு அன்றாட, அடிப்படை மற்றும் அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். அதே நேரம், எமது அரசியல் உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைக்கான நிலையான தீர்வினை நோக்கியும் செயற்பாட்டு ரீதியில் நகர்வதற்கும் முடியும்.

எனவே, இவ்விடயம் தொடர்பில் இந்த அரசு அதிக அவதானம் எடுக்க முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகின்றேன்.  ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களும் இதே நிலைப்பாட்டினைத் தெரிவித்திருப்பதனால், இதனை முன்னெடுப்பதில் இந்த அரசுக்கு சிரமங்கள் எதுவும் இருக்கப் போவதில்லை என்றே கருதுகின்றேன்.

Related posts: