பிரச்சினைகளை தீரா பிரச்சினைகளாக வைத்திருப்பது எமது பொறிமுறை அல்ல – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Thursday, February 21st, 2019

தென்னிலங்கை அரசுடன் தேன் நிலவு கொண்டாடுவது எமது மக்களின் விருப்பங்கள் அல்ல! மாறாக, எமது தாயக தேசத்தின் உரிமையை வென்று கொடுப்பதே எமது இலட்சியக்கனவாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றில் நடைபெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

உரிமைகளை நாம் வென்றெடுக்கும் வழிமுறைக்கு வந்தவர்களை மாவிலை தோரணம் தொங்கவிட்டு நாம் வரவேற்போம். ஆனாலும், எவ்வாறு எங்கள் உரிமைளை பெற முடியும் என்ற பொறிமுறைக்கும் அவர்கள் இன்னும் வர வேண்டும்.

நாம் கூறும் பொறி முறை என்பது ஊடகங்களில் அரசுக்கு எதிராக எதிர்ப்பு கூச்சலிட்டு வீரப்பிரதாபம் காட்டி விட்டு, அரச தரப்பினரை கண்டவுடன் மட்டும் அவர்களோடு கூடிக்குலாவுவது அல்ல.

அரசுக்கு எதிராக ஊடகங்களிலும், நாடாளுமன்றத்திலும் வீரம் பேசி கூச்சலிட்டு விட்டு, பின் கதவால் நுழைந்து அதே அரசுடன் கூனிக்குறுகி நின்று தத்தமது  பிள்ளைகளுக்கும், உறவுகளுக்கும் மட்டும் அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்திலும், இலங்கை மத்திய வங்கியிலும் உயர் பதவிகளை பெற்றுக்கொடுப்பது அல்ல.

வறிய இளைஞர் யுவதிகளின் வாழ்வில் ஒளியேற்றவே எங்கள் பொறிமுறையே ஒழிய, தமிழ் மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவதே எங்கள் பொறிமுறையே அன்றி பொய்யான விளம்பரங்களை நம்பி வந்த அப்பாவி தமிழ் மக்களை சப்ரா என்ற மோசடி நிதி நிறுவனத்தின் பெயரால் அவர்களை ஏமாற்றி தற்கொலை நிலைக்கு தள்ளிவிட்டு அவர்களை இருண்ட வாழ்விற்குள் சிறை வைப்பதல்ல எங்கள் பொறிமுறை.

உணர்ச்சி பொங்க பேசி எமது மக்களை அரசுக்கு எதிராக தூண்டி விட்டு, மறுபுறத்தில்  தமது பிள்ளைகளின் பிறந்தநாள் விழாவிற்கு மட்டும் அதே அரச தலைவரை தமது வீட்டிற்கே அழைத்து பிறந்தநாள் கொண்டாடி குதூகலிப்பதல்ல எங்கள் பொறி முறை.

நாடாளுமன்றத்தில் உணர்ச்சி வேகப்பேச்சு! தேநீர் விடுதியில் சமரசப்பேச்சு! ஊடகங்களில் உரிமை குறித்து கொட்டி முழக்கம்! அரச தலைவர்களை கண்டவுடன் பெட்டிப்பாம்பு! இதுவல்ல எங்கள் பொறிமுறை!

உள்ளொரு பேச்சும் வெளியொரு பேச்சும் இன்றி என்றும் ஒரே முகத்துடன் உள்ளதை மட்டும் பேசும் அறம் காக்கும் அரசியலே எங்கள் பொறிமுறை!

இயற்கை அனர்த்தங்களில் கூட இழப்புகளை சந்தித்த மக்களுக்கு இதுவரை உரிய இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. இது யார் குற்றம்?

அரசின் குற்றமா? அல்லது, இது தாமே உருவாக்கிய அரசு என்றும், தாமே காப்பாற்றிய அரசு என்றும் மார் தட்டி உரிமை கோரும் தரகுத்தமிழ் அரசியல் கூடாரங்களின்  குற்றமா?

அண்மையில் வடக்கு மாகாணத்தில் வெள்ளப் பாதிப்புகளுக்கு கஜா புயல் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ள மக்களுக்கு உரிய இழப்பீடுகள், விவசாய செய்கைகள் அழிவுக்கான இழப்பீடுகள் என்பன கூட முறையாக இன்னமும் எமது மக்களுக்கு வழங்கப்படாத நிலையில்,எமது மக்களின் முன்பாக வந்து அடிக்கற்களை நாட்டுவதாலேயோ, திட்டங்களை அறிவிப்பதாலேயோ எமது மக்களின் வயிறுகள் நிரம்பிவிடப் போவதில்லை.

அல்லது எமது மக்களின் முன்பாக போய் நின்று, புதிய அரசியல் யாப்பில் ‘அது இருக்கிறது, இது இருக்கிறது’ என தங்களது மோதாவித் தனங்களை கட்டவிழ்த்துக் கொண்டிருப்பதாலும் எமது மக்களின் வறுமை நிலை ஒழியப் போவதில்லை.

Related posts:


இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் இழப்புக்களை தடுக்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுக்கும் நடவடிக்கைகள்...
வடக்குக் கிழக்கே தமிழர் தாயகம் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை அதன் நோக்கத்தை நிறைவு செய்திருக்கவில்லை – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில்...