ஈ.பி.டி.பி மீதான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கடுமையாக கண்டிக்கின்றோம்.

Saturday, March 5th, 2016

காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. காணாமற்போதல் மற்றும் கொலைகள் தொடர்பான சம்பவங்களுடன் ஈ.பி.டி.பியை தொடர்புபடுத்தி கூறப்படுகின்ற கதைகள், அடிப்படை ஆதாரமற்றவையாகவும், எமது அரசியல் எதிராளிகளின் சதிகள் நிறைந்த உள்நோக்கத்துடன் திட்டமிடப்பட்டதாகவும் காணப்படுகின்றன என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

ஆட்களைக் கடத்துவதும், கொலைகள் செய்வதும், கப்பம் வாங்குவதும் ஈ.பி.டி.பியின் கொள்கைகளோ, வேலைத்திட்டங்களோ அல்ல. மாறாக துயரத்திலிருந்து மக்களை மீட்பதும், யுத்தத்தால் அழிந்த எம் தேசத்தை அபிவிருத்தியால் மீளக்கட்டி எழுப்புவதும், நீடித்த நிலையான அரசியல் உரிமைகளுக்காக நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையில் அரசியல் ரீதியாக அவற்றை வென்றெடுப்பதுமே ஈ.பி.டி.பியின் கொள்கையும் கோட்பாடுகளுமாகும்.

எனவே தொடர்ந்தும் ஈ.பி.டி.பி மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.  காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதாக கூறப்படும் பரணகம ஆணைக்குழுவின் செயற்பாடுகள் விசாரணையை மட்டும் பதிவு  செய்வதாக இல்லாமல் அவற்றின் உண்மைத்தன்மைகளையும் வெளிக்கொணர முன்வரவேண்டும். இதைவிடுத்து வெறுமெனவே அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை பதிவு செய்வதாகவும் போலி பிரச்சாரமாகவும் இருப்பதையும் காணமுடிகின்றது.

இப்படி பதிவுகளை மட்டும் செய்து கொண்டு அறிக்கை தயாரிப்பதால், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியோ, நியாயமோ கிடைத்துவிடப் போவதில்லை. அது அரசியல் உள்நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்ற அர்த்தமற்ற கண்துடைப்புச் செயற்பாடாகவே இருக்கும்.

கடந்த காலத்திலும் வெறுமெனவே வாக்குமூலங்களை பதிவு செய்த ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் அர்த்தமற்றதாகவே போயிருக்கின்றன. அவர்களின் முன்னிலையில் அழுகையும், கண்ணீருமாக தமிழ் மக்கள் கொடுத்த வாக்குமூலங்களும், செய்த முறைப்பாடுகளும் கடந்தகாலங்களைப் போன்று காற்றில் கரைந்துபோய்விடும் நிலையாக இருந்துவிடக்கூடாது..

ஆகவே யுத்தகாலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் நீதியானதும், தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான விசாரணைப் பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ள நிலையில், இவ்வாறான ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனாலும் படையினராலும், விடுதலைப் புலிகளாலும் ஏனைய தமிழ் இயக்கங்களாலும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டு மரணமானவர்கள், மாற்று தமிழ் இயக்கங்களில் இருந்ததற்காக தெருத் தெருவாக கொலை செய்யப்பட்டவர்கள், புத்திஜீவிகளாக இருந்து கொலை செய்யப்பட்டவர்கள், ஏனைய இயக்கங்களுக்கு ஆதரவாக இருந்ததற்காக கொலை செய்யப்பட்டவர்கள், கொடுக்கல்வாங்கல்களுக்காக கொலை செய்யப்பட்டவர்கள், மாற்றுக் கருத்துக்களை கொண்டிருந்தமையால் கொலை செய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் என யுத்த காலத்தில் பலியாகிப்போனவர்கள் தொடர்பாக அர்த்தமுள்ள விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதுடன் உண்மையைகள் கண்டறியப்படவேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்க பரிகாரம் வழங்கப்பட வேண்டும், குற்றவாளிகள் இனங்காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் விசாரணைகள் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பக்கூடிய வகையில் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதை ஈ.பி.டி.பி தொடர்ந்தும் வலியுறுத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts:

தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்வதில் மட்டும் அக்கறை காட்டும் வட மாகாண சபை அவற்றைச் செயற்படுத்த முயல...
ஐ.தே.மு - கூட்டமைப்பு கூட்டாட்சியில் யாழ்ப்பாணத்திற்கு அநீதி: விசாரணைக்கு அமைச்சரவையில் தீர்மானம் அம...
“ஒரே நாடு ஒரே சட்டம்” என்பது இனத்துவம் அல்ல சமத்துவம் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்!...
கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உற...
வடக்கில் பாரிய கடல் பாசித் திட்டம் - தேவையறிந்து உதவும் இந்தியாவிற்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்...