ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தேசிய மாநாடு குறித்து தோழர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய ஆசிச்செய்தி!

Sunday, April 3rd, 2016

எமது மக்களின் இலட்சிய கனவுகளை நிறைவேற்றவெறும் உணர்ச்சி மயக்கத்தில் மட்டும் உறங்கிக் கிடப்போரை தட்டியெழுப்பி புதிய மக்கள் சக்தியாக உருவாக்க இந்தமாநாட்டுத் தீர்மானங்கள் உறுதியை வழங்கவேண்டும் என நான் வாழ்த்துகின்றேன் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (பத்மநாபா) தேசிய மாநாட்டிற்கு வழங்கிய ஆசிச் செய்தியில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்துக்களை  தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ரிம்பர் மண்டபத்தில் இன்று(3) நடைபெற்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தேசிய மாநாட்டில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வாழ்த்துச் செய்தியை அவரது பிரதிநிதியாக  நிகழ்வில் கலந்து  கொண்ட கட்சியின் முக்கியஸ்தரான தோழர் விந்தன் வாசித்தார்.

ஆசிச் செய்தியின் முழு வடிவமும் எமது இணையத்தள வாசகர்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது –

மாநாட்டு தீர்மானங்கள் வெற்றியின் திசைநோக்கி உறுதியுடன் செல்ல வாழ்த்துகிறேன்!…

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியானது தமிழ் பேசும் மக்களின் உரிமைப்போராட்ட களத்தில் அளப்பரிய அர்ப்பணங்களை ஆற்றிய மாபெரும் சுதந்திரபோராட்ட இயக்கம்.

எமது இரத்தமும் தசையுமாக உயிர்த்துடிப்புடன் நாம் எழுந்து நிமிர்ந்து எமது மக்களுக்கான விளை நிலத்தில் நாம் வேரூன்றிய நாட்களை நான் எண்ணிப்பார்க்கிறேன்.

நாம் ஈழ மக்கள்!.. நமது மொழி தமிழ்!!. நம் நாடு ஈழம்!!! இந்த உறுதிமொழியை எமது ஆழ் மன உணர்வுகளில் ஏந்தி உரத்த சிந்தனைகளோடு உரிமைப்போராட்ட களத்தை நாம் வழிநடத்திச்சென்ற நினைவுகளை நான் மீட்டுப்பார்க்கின்றேன்.

ஈழ தேசக் கனவுகளை எமது நெஞ்சங்களில் சுமந்து அதற்காக நாம் இழந்த உன்னத தோழர்களின் உயிர்களையும்; நாம் சிந்திய இரத்தங்களையும் வியர்வைகளையும் அதற்காக தாங்கிவந்த சுமைகளையும் வலிகளையும் நான் நினைத்துப் பார்க்கின்றேன்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற விருட்சத்திற்கு விதையிட்டு அதன் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவனாக தோழர் நாபா அவர்களுடன் நானும் சேர்ந்து உழைத்த வரலாற்றுப் பதிவுகளையும்…

எம்முடன் கூடவே நடந்து மிகவும் நெருக்கடியான காலச் சூழல்களில் கட்சியை வழிநடத்திச் சென்ற இன்னொரு ஸ்தாபக உறுப்பினரான தோழர் குண்சி அவர்களையும் மற்றும் தோழர்களையும் நான் இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதர மக்களை நோக்கியும் இமலையக மக்களை நோக்கியும் நாம் தோழமைக் கரம் நீட்டி ஒன்றுபட்ட மக்கள் எழுச்சியின் ஊடாக தேசிய ஐயனநாயக புரட்சியை நடத்தி எமது இறுதி இலக்கு நோக்கி செல்வதற்கு நாம் ஏற்றுக்கொண்ட புரட்சிகர சிந்தனைகளை இன்றைய இந்த மாநாட்டின் ஊடாக ஞாபகப்படுத்துகிறேன்.

எமது உரிமைபோராட்டம் என்பது அரச இயந்திரத்திற்கு எதிரானதே அன்றி அப்பாவி சிங்கள சகோதர மக்களுக்குஎதிரானது அல்ல என்று..

நாம் ஒரு புரட்சிகர முற்போக்கு சித்தாந்தத்தை வகுத்து சிங்கள சகோதர மக்களை நோக்கியும் எமது தோழமைக் கரங்களை நீட்டிய எமது புனித இலட்சிய வரலாற்று பயணத்தை நான் நினைத்துப் பார்க்கிறேன்.

எமது உரிமைபோராட்டக் களத்தில் நின்று தமது உன்னத உயிர்களை தியாகம் செய்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பலநூறு தோழர்களுக்கு முதலில் நான் அஞ்சலி மரியாதை செலுத்துகிறேன்.

எமது உரிமை போராட்ட வரலாறெங்கும் என்னுடன்  கூடவே நடந்துஇஒரு சுதந்திர போராட்ட இயக்கத்தின் மனிதநேய அடையாள தலைவராக திகழ்ந்து..

வாரலாறு ஏற்றுக்கொள்ளாத சகோதர படுகொலைக்கு பலியாகிப்போன தோழர் நாபா அவர்களுக்கும்ஏனைய தோழர்களுக்கும் நான் இந்தமாநாட்டின் ஊடாக செவ்வணக்கம் செலுத்துகிறேன்…

தமது அழகிய வாழ்வை வெறுத்து  வாலிபக் கனவுகளை இலட்சியக் கனவுகளாக மட்டும் ஏற்று தமிழ் பேசும் மக்களுக்கு அழகார்ந்த ஒரு உரிமை வாழ்வை அமைத்து கொடுப்பதற்காக போராடிய அனைத்து போராளிகளினதும் கனவுகளை வென்றெடுப்பதே எமது இலட்சியமாகும்.

இலங்கை இந்திய ஒப்பந்த கால கட்டத்தில் எமது உரிமைபோராட்ட பாதையில் இருந்துஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியானது யதார்த்த எண்ணங்களோடுஇ தொலைதூரப் பார்வையோடு சந்தி பிரித்துக்கொண்டது.

அன்றிலிருந்து இன்றுவரை ஐனநாயக வழிமுறையில் நின்று எமது மக்களுக்கான அரசியல் இலக்கை எட்டிவிட தமது சக்திக்கு ஏற்றவாறு உறுதியுடன் குரல் கொடுத்துவருகிறது.

 இந்தமாநாட்டின் ஊடாக எடுக்கும் தீர்மானங்களும் அரசியல் திட்ட நடைமுறைகளும் இந்த மாநாட்டை நடத்தும் எமது தோழமை கட்சிக்கு பலம் சேர்க்க நான் வாழ்த்துகிறேன்.

கருத்து மக்களை பற்றிக்கொண்டால் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கும். எமது மக்களின் இலட்சிய கனவுகளை நிறைவேற்ற வெறும் உணர்ச்சி மயக்கத்தில் மட்டும் உறங்கிக் கிடப்போரை தட்டியெழுப்பி புதிய மக்கள் சக்தியாக உருவாக்க இம்மாநட்டுத் தீர்மானங்கள் உறுதியை வழங்கவேண்டும் என நான் வாழ்த்துகின்றேன்.

அதற்காக ஈழ மக்கள் ஐனநாயக கட்சியினராகிய நாம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் என்ற பொது உடன்பாட்டு அரசியல் தளத்தில் நின்று இணைந்து செயலாற்ற எமது தோழமைக் கரங்களை உறுதியுடன் நீட்டுகின்றோம்.

மாநாட்டு தீர்மானங்கள் வெற்றியின் திசைநோக்கி உறுதியுடன் செல்ல வாழ்த்துகிறேன்!… வாழ்க தோழர் நாபா அவர்களின் நாமம்.!  வெல்க அவரது இலட்சியக் கனவுகள்!!

என்றும் நாம் மக்களுக்காக

நாம் செல்லும் பயணம் வெல்லும்!

தேழமையுடன்

டக்ளஸ் தேவானந்தா

செயலாளர் நாயகம்

ஈழ மக்கள் ஐனநாயககட்சி (ஈ.பி.டி.பி)

Related posts:


மீள்குடியேற்ற இடங்களிலும் உப தபாலகங்கள் அமைக்கப்பட வேண்டும் - செயலாளர் நாயகம் வலியுறுத்து!
வடக்கு போக்குவரத்து சபைகளில் இடம்பெற்ற பதவி உயர்வு முறைகேடுகள் இன்னமும் உரியவாறு விசாரிக்கப்படவில்லை...
அலங்கார மீன் வளர்ப்பு தொழில்துறையில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - ...