இந்தியாவிலிருந்து நாடுதிரும்பிய மக்களது வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தித் தாருங்கள் – டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த மக்கள் கோரிக்கை!
Thursday, June 30th, 2016நாங்கள் உங்களுக்கு வாக்களிக்காதிருந்தாலும் தமிழ் மக்களது பிரதிநிதி என்ற வகையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்காக எங்கள் பகுதிக்கு வருகைதந்துள்ள உங்களுக்கு என்றும் நாம் கடமைப்பட்டுள்ளதுடன் தற்போது நாம் எதிர்கொள்ளும் வாழ்வியல் தேவைகளையும் தீர்த்துவைப்பீர்கள் என்றும் நம்புகின்றோம் என இந்தியாவிலிருந்து மீள குடியமர்ந்து முழங்காவில் பகுதியில் வாழும் மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் கடந்தகாலத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக இந்தியாவுக்கு அகதிகளாக சென்றிருந்த மக்கள் தற்போது நாட்டில் இயல்பு சூழல் உருவாக்கப்பட்டுள்ளதன் காரணமாக மீளவும் தமது சொந்த இடங்களுக்கு வருகைதருகின்றனர்.
இந்நிலையில் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்தியாவிலிருந்து தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்துள்ள 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்திற்கு தேவையான அடிப்படை உதவிகள் கூட இன்னமும் தமக்கு வழங்கப்படவில்லை என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேதனையுடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நேற்றையதினம் (29) முழங்காவில் பகுதியில் குறைகேள் நிகழ்வில் கலந்தகொண்டு மக்களது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த மக்கள் தாம் மீளக்குடியமர்ந்த பின்னரான காலப்பகுதியில் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதன்போது இந்தியாவிலிருந்து தாம் மிகவும் சந்தோசத்துடன் சொந்த இடங்களில் வாழ வந்திருந்ததாகவும் ஆனால் தாம் இங்கு வந்ததன் பின்னர் இங்கு எதுவிதமான உதவிகளும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் இதனால் தாம் பல இடர்பாடுகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்து வருவதாக தெரிவித்த குறித்த மக்கள் தமது வாழ்வியலை மேம்படுத்தி செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறும் கோரியிருந்தனர்.
அத்துடன் தமது பகுதியில் சமுர்த்தி நிவாரணம் வழங்குவதில் பல குறைபாடுகள் காணப்படுவதாகவும் இதனை நிவர்த்தி செய்து தமக்கும் குறித்த சமுர்த்தித்திட்டத்தை பெற்றுத்தருமாறும் தமது பகுதிக்கு மின்சார வசதிகளை ஏற்படுத்தி தருமாறும் தாம் இந்தியாவில் கல்வி கற்றுள்ளதால் இங்கு தொழில்வாய்ப்பு பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் இவற்றுக்கான தீர்வகளையும் பெற்றுத்தருமாறும் வேண்டினர்.
குறித்த மக்களது பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடி காலக்கிரமத்தில் தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். அத்துடன் கடந்தமாதம் குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவந்துள்ளதாகவும் அதனால் அனைத்து தேவைப்பாடுகளும் துறைசார்ந்தவர்களூடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Related posts:
|
|