ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொவிட்தொற்று தடுப்பூசி வழங்கப்பட்டது டக்ளசின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி நடவடிக்கை! மூடச்சொன்னவர்களின் மூடத்தனத்துக்கு முற்றுப்புள்ளி!

Friday, June 25th, 2021

கிளிநொச்சி விடியல் மற்றும் வானவில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 3,084 பேருக்கு நேற்றையதினம் சீனோபாஃம் கொவிட் தொற்று தடுப்பூசி வழங்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஏற்று இதற்கான உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியிருந்தார்.

இதன்படி, நேற்று வியாழக்கிழமை காலைமுதல் வானவில் மற்றும் விடியல் தொழிற்சாலைகளின் ஊழியர்களுக்கான சீனோபாஃம் தடுப்பூசி, கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தலைமையக இராணுவத்தினரின் உதவியுடன், பிராந்திய சுகாதார சேவைகள் மாவட்ட பணியாளர்களால் வழங்கப்பட்டது.

நேற்றையதினத்தில் மாத்திரம் 3,084 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாகவும், ஏனையோருக்கு இன்றும் நாளையும் தொடர்ச்சியாக தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும், பிராந்திய சுகாதார சேவைகள் மாவட்டப் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் தெரிவித்தார்.

கொவிட் தொற்று மூன்றாம் அலை ஆரம்பித்த காலம் தொட்டு, ஆடைத்தொழிற்சாலையால் மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் பேராபத்து என்ற விதமாக சில தரப்புக்கள் வேண்டுமென்றே எதிர்ப்புக்களை வெளியிட்டு குழப்பம் ஏற்படுத்தி வந்தனர்.

மாவட்டத்திலுள்ள மக்களைப் பாதுகாப்பதற்காக ஆடைத் தொழிற்சாலையை மூடவேண்டும் என்று இவர்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை முன்வைத்து வந்ததுடன், சில இடங்களில் தொழிலாளர்களை வேலைக்குச் செல்லவிடாமல் பலவந்தமாகத் தடுத்தும் வந்தனர்.

எனினும், ஆரம்பம் முதலே ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொவிட் பரவல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் கடுமையாக பாடுபட்ட பிராந்திய சுகாதார சேவைகள் மாவட்டப் பணிப்பாளரும், ஊழியர்களும், தொடர்ச்சியாக ஊழியர்களுக்கு கொவிட் தொற்றுப் பரிசோதனை மேற்கொண்டு, தொற்று அடையாளம் காணப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, தொழிற்சாலைக்குள்ளும், சமூகத்திலும் தொற்றுப்பரவல் ஏற்படாமல் தடுப்பதில் வெற்றிகண்டனர்.

ஆடைத்தொழிற்சாலையை மூடவேண்டும் என்றவிதமான விசமப் பிரசாரங்களை எதிர்கொள்ளும் வகையில், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்டச் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி, வடக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்டவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு அவசியமான எல்லாவிதமான முயற்சிகைளயும், ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்புரைக்கமைய மேற்கொண்டுவந்தனர்.

இதற்கு மேலதிகமாக, ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவசர கோரிக்கையையும் முன்வைத்திருந்தார்.

இதனிடையே சில தரப்புக்கள் இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச்சென்று ஆடைத்தொழிற்சாலையை மூடுவதற்கு பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டிருந்தனர்.

எனினும், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் சுமார் 3,000 பேருக்கு மேல் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கொவிட் தொற்றுப் பரிசோதனையில் 6 பேர் மாத்திரமே தொற்றுடன் இனங்காணப்பட்டிருப்பதாக ஜுன் 18ம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கொவிட் நிலைமைகள் தொடர்பான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடத்திய விசேட கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சரவணவன் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால் தொழிற்சாலை நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பணிப்புரை விடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விரைவில் ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்திருந்தார்.

இவ்வாறு அமைச்சர் உறுதிமொழி வழங்கிய ஒரு வாரத்துக்குள், நேற்றையதினம் ஜனாதிபதியின் உத்தரவின் பிரகாரம் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு சீனோபாஃம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், ஆரம்பம் முதலே ஆடைத் தொழிற்சாலையை மூடுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வந்த விசமத்தனமான முயற்சிகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதுடன், ஊழியர்களின் வாழ்வாதாரமும், மாவட்டத்தின் பொருளாதாரமும் பாதுகாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

உலகப் பாலைவனப் பொருளாதாரத்தில் எமது நாட்டின் பொருளாதாரம் மட்டும் சோலைவனமாக இருக்கின்றது எனக் கூற முட...
இந்தியாவில் சிக்கியிருந்தவர்களுடன் கட்டுநாயக்காவை வந்தடைந்தது முதலாவது விமானம் - நாடு திரும்பியவர்கள...
கடலில் அதிக மீனினங்கள் இருக்கும் இடத்தை அறிய அதிநவீன கருவி – எரிபொருள் செலவை குறைக்கவும் நடவடிக்கை –...