அரசு வழங்கிய வாக்குறுதிகள் என்ன என்பதை  சம்பந்தன் வெளிப்படுத்த வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 29th, 2016

புதிய அரசாங்கம் பதவிக்கு வர முன்பும், பதவிக்கு வந்த பின்பும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதாகவும், இணக்கங்களைக் கண்டிருப்பதாகவும், அரசாங்கம் தமக்கு வாக்குறுதிகளை வழங்கியிருப்பதாகவும், ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலின்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு கூறியிருந்தார்கள்.

புதிய அரசாங்கம் ஆட்சியமைத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரையும் அரசாங்கம் தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் அரசாங்கத்திடம் எல்லாவற்றையும் எடுத்துக் கூறியிருப்பதாகவும் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

என்ன வாக்குறுதிகள் தமக்கு வழங்கப்பட்டிருக்கின்றது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்குப் பகிரங்கப்படுத்தாமல் இருப்பது ஏன்? என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்-

உண்மையில் அரசாங்கம் தமிழ் மக்களுக்கான வாக்குறுதிகள் எதையேனும் வழங்கியிருக்கின்றதா? அல்லது தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக, அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருப்பதாகக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பொய்யைக் கூறியிருக்கின்றதா?

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்குள் தீர்வு இல்லை என்றும், சமஷ;டிக்கு இடமே இல்லை.

ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு என்றும், பௌத்த மதத்திற்கு முதல் இடம் என்ற அரசின் நிலைப்பாடு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனமாக இருப்பது ஏன்?

அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்கப்போகின்றது என்றால், அரசு வழங்கிய வாக்குறுதிகள் வேறு என்ன விடயங்கள் குறித்த வாக்குறுதிகளாக இருக்கும்?

வடக்கு கிழக்கு இணைப்பிலும், சமஷ;டி முறைமையிலான தீர்விலும் அரசாங்கம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிராகரிக்குமாக இருந்தால்,

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகவும், புதிய அரசுக்கு இணக்கமான அரசியல் பங்காளியாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருப்பதில் அர்த்தம் இல்லை.

கூட்டமைப்பின் அர்த்தமற்ற அரசியல் போக்குக்குறித்தும், அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதாகக் கூறிவந்த வாக்குறுதிகள் எவை என்பது தொடர்பாகவும் 2017ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்,

தமிழ் மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் மக்களை ஏமாற்றியிருப்பதை ஏற்றுக்கொண்டு பதவிகளைத் துறந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

DSCF0271

Related posts:


தொல்பொருள் திணைக்களம் வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்துகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்...
பனை தென்னை வள கூட்டுறவு அபிவிருத்தி சங்கத்தினால் மேற்கொள்ளக்கூடிய, வேலைத் திட்டங்கள் குறித்து அமைச...
டெங்கு நோயின் பரவலை கட்டுப்படுத்த துரித செயற்றிட்டம் - மருத்துவ தவறுகள் காணப்பட்டால் அவற்றை களையவும்...