அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய உறுதி மொழியை அடுத்து டிக்கோவிற்ற கடற்றொழிலாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

Tuesday, March 3rd, 2020

வெளிநாட்டு ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளினால் உள்ளூர் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர்கள் எதிர்கொள்வதாக கூறப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதுடன் அமைச்சரவையின் கவனத்திற்கும் கொண்டு வந்து ஒரு வார காலப் பகுதிக்குள் நியாயமான தீர்வினைப் பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வெளிநாட்டு ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளின் செயற்பாடு காரணமாக  பாதிக்கப்படுவதாகவும் வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை இரத்து செய்யுமாறு வலியுறுத்தியும் கொழும்பு டிக்கோவிற்ற பிரதேசத்தில் இன்று(03.03.2020) கடற்றொழிலாளர்களினால் வீதி மறியல் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பிரதேசத்திற்கு நேரடிய விஜயம் செய்த கடற்றொழில் மற்றம் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கிய மேற்படி உறுதி மொழியினையடுத்து குறித்த ஆர்ப்பாட்டம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேவேளை, உள்ளூர் ஆழ்கடல் பல நாள் கலங்களின் உரிமையாளர்கள் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது, உள்ளூர் கடற்றொழிலாளர்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளையும் சந்தை வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் கடற்றொழில் ஊடாக அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்த அமைச்சர் அவர்கள் உள்ளூர் மீனவர்கள் எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து நியாயமான தீர்வினை பெற்றுத் தருவதாக தெரிவித்திருந்தார்.

அத்துடன், கடந்த ஆட்சிக் காலத்தில் அனுமதி அளிக்கப்பட்ட 35 வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதி புதிப்பக்கப்படும் போது அது குறித்து மீள் பரிசீலனை செய்யப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

அதேவேளை, உள்ளூர் ஆழ்கடல் மீன்பிடித் தொழிற்துறை சார்ந்தவர்களின் பிரதிநிதிகளையும் வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள் சார்ந்த தரப்பினரையும் அழைந்து கலந்துரையாடி சுமுகமான தீர்வினை காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் அமைச்சு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அனுராதபுரம் சிறையில் சந்தேகநபர் தாக்குதல் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டா? சபையில் டக்ளஸ் தேவானந...
புங்குடுதீவு பாடசாலை மாணவி கேஷனாவின் மரணத்திற்கு வடக்கு மாகாணசபையே பொறுப்புக் கூறவேண்டும் - டக்ளஸ் எ...
மீன்பிடி உபகரணங்களுக்கு நிர்ணய விலை - கடற்றொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் அக்கறை!