அமைச்சர் டக்ளஸின் ஆரோக்கியமான கோரிக்கைகளினால் காத்திரமான தீர்மானங்கள் -யாழ். மாவட்ட செயலகத்தில் சம்பவம்!

Tuesday, September 15th, 2020

மானிய அடிப்படையில் உருளைக் கிழங்கு விதைகளை வழங்குதல், இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் பயிர் செய்கைக்கு நஸ்டஈடு வழங்குதல்,  உட்பட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (15.09.2020) இடம்பெற்ற ‘சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி’ எனும் தொனிப் பொருளிலான கலந்துரையாடலில் கலந்துகொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கே சாதகமான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் 200 ஹெக்ரேயரில் வடக்கு விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கு வடக்கு விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்ற நிலையில் அவர்களுக்கான உருளைக் கிழங்கு விதைகளை மானிய அடிப்படையில் வழங்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய கலந்துரையாடலில் மீண்டும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து, விவசாய அமைச்சு அதிகாரிகளினால் வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் மானிய விலையில் உருளைக் கிழங்கு விதைகளை வழங்குவற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று, யாழ்ப்பாணக் கல்லூரி தொழில் நுடப்க் கல்லூரியின் ஆரம்பிக்கப்பட்டுள்ள விவசாய டிப்ளோமா பயிற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அதிகாரிகளுடன் ஆராய்நத விவசாய அமைச்சர், இரண்டு வார காலத்தில் சாதகத்தன்மைகள் தொடர்பில் ஆராய்ந்து தெரியப்படுத்துவதாகவும், அதேவேளை வடக்கு மாகாணத்தில் விவசாய நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஜப்பானில் இருந்து கிடைத்துள்ள ஒரு பகுதியை வடக்கிற்கு ஒதுக்கித் தருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், வாழை, உழுந்து, கஜீ, பப்பாசி போன்ற பயிர் செய்கைகளும் இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் போது நஸ்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இவை போன்ற பல்வேறு விடயங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்றைய கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கபட்ட நிலையில் அவை தொடர்பில் சாதகமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: