அமரர் சிவஞானசோதியின் இழப்பு எனக்கு மட்டுமல்லாது இலங்கைத் தீவுக்கும் பேரிழப்பு – அஞ்சலி உரையில் அமைச்சர் டக்ளஸ்!

அமரர் சிவஞானசோதியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தியும் மலர்மாலை அணிவித்தும் இறுதி அஞ்சலி மரியாதையைச் செலுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் சித்தன்கேணியை பிறப்பிடமாகக் கொண்ட அமரர் சிவஞானசோதி கடந்த 5 ஆம் திகதி உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் காலமானார்.
இந்நிலையில் அன்னாரின் பூதவுடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக கொழும்பு ஜயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமரரின் பூதவுடலுக்கு மலர்வளையம் சாத்தியும் மலர்மாலை அணிவித்தும் தனது இறுதி அஞ்சலிமரியாதையை செலுத்தியிருந்ததுடன் அஞ்சலி நிகழ்விலும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்.
குறித்த அஞ்சலி உரையில் –
அமரர் சிவஞானசோதியை முதலில் சந்தித்தபோது அவருடைய ஆற்றலையும் துடிப்பு மிக்க அக்கறையையும் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. அந்தவகையில் எனது அமைச்சுப் பொறுப்புகளில் முதல் அமைச்சின் செயலாளராக சிறப்பாக கடமையாற்றி இருந்ததுடன் நான் அமைச்சராக இருந்த பல அமைச்சுக்களிலும் செயலாளராக என்னுடன் பணியாற்றியிருந்தார்.
அக்காலப்பகுதியில் நான் சந்தித்த அதிகாரிகளுள் மிக அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் விசுவாசமாக நீண்டகாலம் உழைத்த ஒருவராக இருந்துள்ளார்.
அதுமாத்திரமன்றி தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நான் முயற்சிகளை மேற்கொண்டுவந்த போதெல்லாம் எனக்கு மிகவும் பக்கபலமாக செயற்பட்டு பல தீர்வுகளை பெற்றுக்கொடுக்க உழைத்துள்ளவர் என்பதுடன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வேறு ஆட்சிகளில் அவர் பெறுப்பெடுத்திருந்த சந்தர்ப்ங்களில் கூட என்னுடன் நெருங்கிய தொடர்புகளில் இருந்தவராகவும் உள்ளார்.
நான் சிவஞானசோதிக்கு ஒரு அமைச்சராக அறிமுகமானாலும் அவர் எனது சகோதரர் போன்றே இருவருக்கு இடையே உறவுகள் இருந்தன. அந்தவகையில் அவரது இழப்பு இந்த நாட்டுக்கு மட்டுமல்லாது எனக்கும் தனிப்பட்ட ரீதியில் பெரும் துயரை தந்துள்ளது எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது அஞ்சலி உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது இழப்பு இலங்கைத் தீவுக்கு ஒரு பேரிழப்பாகவும் அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் அன்னாரது இழப்பால் துயருற்றிருக்கும் அவரது துணைவியார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களது துயரில் நானும் பங்கெடுத்துக் கொள்கின்றேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|