வடக்கில் நிலவும் சீரற்ற கால நிலை – நெடுந்தீவு மற்றும் நயினாதீவுக்கான படகு சேவைகள் இடைநிறுத்தம்!

Monday, November 25th, 2024

வடக்கில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக குறிகாட்டுவான் நெடுந்தீவு இடையிலான படகு சேவைகள் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது

இதேவேளை தற்போது ஏற்பட்டுள்ள மழையுடனான சீரற்ற காலநிலையால் நயினாதீவு குறிகாட்டுவான் படகு சேவை இன்று 25.11.2024  மாலை 4:00மணியுடன் நிறுத்தப்படவுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

அதற்கமைய, நயினாதீவில் இருந்து மாலை 3:30 மணிக்கும் குறிகாட்டுவானில் இருந்து மாலை 04:00 மணிக்கும் இறுதிப் படகுச்சேவை இடம்பெறும் என நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம்  தெரிவித்துள்ளது .

பயணிகள் தங்கள் பயணங்களை குறித்த நேரத்தில் மேற்கொள்ளும் படி கேட்டுக்கொள்கின்றனர்.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை வடமாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டத்தில், இடர்நிலைமையின் போது தீவகத்திலுள்ள நோயாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான உதவிகளை கடற்படையினர் மேற்கொள்ளவேண்டும் எனவும், கடல் மார்க்கமாக பயணிக்கமுடியாத நிலைமை ஏற்பட்டால் விமானப்படையினர் உதவவேண்டும் என்றும் சுகாதாரப் பணிப்பாளர் கோரிக்கை விடுத்தார். அதற்கு கடற்படையினர் தமது உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தனர். அத்துடன் குறிகாட்டுவான் இறங்குதுறையிலிருந்து பயணிகளை ஏற்றி இறக்கும் இரண்டு படகுகளையும், புயல் நிலைமை ஏற்பட்டால் பாதுகாத்து தருவதற்கு கடற்படையினரின் உதவியை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கோரினார். அதற்கும் கடற்படையினர் இணக்கம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: