வடகீழ்ப் பருவக்காற்றுஒக்டோபர் மூன்றாவது வாரத்தில் ஆரம்பிக்கும் – பிரதீபராஜா எதிர்வுகூறல்.!

…..
2025 ஆம் ஆண்டுக்கான வடகீழ்ப் பருவக்காற்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சிரேஸ்ட விரிவுரையாளர்
நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் –
இவ்வாண்டு வடகீழ்ப் பருவக்காற்று மழை சராசரியை அண்மித்ததாகவே காணப்படும். குறிப்பாக 500 மி.மீ. முதல் 600 மி. மீ. இற்கு இடைப்பட்ட அளவிலேயே மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
அதேநேரம் இவ்வாண்டு 5க்கு மேற்பட்ட தாழமுக்க நிகழ்வுகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
குறிப்பாக,
ஒக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்தில் ஒரு தாழமுக்கமும்
நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் ஒரு தாழமுக்கமும்
நவம்பர் மாதத்தின் இறுதியில் ஒரு தாழமுக்கமும்
டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் ஒரு தாழக்கமும்
நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஒரு தாழமுக்கமும் தோன்றுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இதில் நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியிலும் இறுதிப்பகுதியிலும் தோன்றும் தாழமுக்கங்கள் தீவிர தாழமுக்கங்களாகவோ அல்லது புயல்களாகவோ மாறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
அதேபோன்று டிசம்பர் மாதத்தில் தோன்றுகின்ற தாழமுக்கமும் தீவிரமான தாழமுக்கமாக அல்லது புயலாக மாறுவதற்கான வாய்ப்புகளை கொண்டிருக்கின்றது.
இவ்வாண்டு வடகீழ்ப் பருவக்காற்று காலத்தில் சராசரியை அண்மித்த அல்லது அதற்கு சற்றுக் கூடுதலான மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும் கூட பெருமளவுக்கு மழை நாட்கள் செறிவான மழைவீழ்ச்சியைக் கொண்டதாகவே அமைந்திருக்கும்.
இதனால் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புகள் இம்முறையும் காணப்படுகிறது.
நவம்பர் மாதம் ஐந்தாம் திகதியில் இருந்து நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு இடையிடையில் இவ்வாண்டின் வடகீழ்ப் பருவக்காற்று மழையின் 60 வீதமான மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
ஒக்டோபர் மாதம் 20 ம் திகதிக்கு பின்னர் வடகீழ்ப் பருவக்காற்று மழை படிப்படியாக தீவிரம் பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. எனவே விவசாயிகளை பொறுத்த வரையில் தங்களுடைய காலபோக நெற் செய்கைக்கான புழுதி விதைப்பின் ஆரம்ப கட்ட வேலைகளை ஒக்டோபர் மாதத்தின் முதற் பகுதியில் இருந்து ஆரம்பிக்கலாம்.
சேற்று விதைப்பை மேற்கொள்பவர்கள் ஒக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பிக்கலாம்.
செப்டம்பர் மாதத்தை பொறுத்தவரையில் எங்களுக்கு வடகீழ்ப் பருவக்காற்று மழையை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டிய மாதமாகும்.
குறிப்பாக செப்டம்பர் இறுதிக்குள் அல்லது ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்திற்குள் எங்களுடைய காணிகளில் காணப்படுகின்ற மரங்களின் விதானங்களின் அளவுகளை குறைத்து, அந்த மரங்கள் கடும் காற்றினால் அல்லது கடும் மழையினால் வீழ்ந்து உயிராபத்துக்களை ஏற்படுத்துவதை அல்லது சொத்திழப்புக்களை ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டும்.
அத்தோடு எமது வாழிடங்கள் மற்றும் பணியிடங்களுக்கு அண்மித்திருக்கும் பட்ட மரங்கள் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தி அவற்றை உரிய காலத்தில் அகற்றுவதன் மூலம் நாம் எமது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும்.
அத்தோடு எங்களுடைய பிரதேசங்களில் காணப்படுகின்ற இயற்கையான அல்லது செயற்கையான வடிகால்கள் செப்டெம்பர் மாத இறுதிக்குள் துப்புரவாக்க வேண்டும். இதன் மூலம் கிடைக்க இருக்கின்ற வடகீழ்ப் பருவமழை காரணமாக ஏற்படக்கூடிய வெள்ள அனர்த்தங்களை தடுக்கும் வகையில் அந்த கால்வாய்கள் வெள்ள நீர் வழிந்தோடக்கூடிய வகையில் துப்புரவாக்குதல் வேண்டும்.
அத்தோடு இக்காலப் பகுதியில் எங்களுடைய பிரதேசங்களில் காணப்படுகின்ற பள்ளமான அல்லது மழை நீர் தேங்கி நின்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இடங்களை அடையாளப்படுத்தி குறியீடுகளை ( சிவப்புக் கொடி கட்டுதல் அல்லது ஆபத்தான பிரதேசம் என அடையாளப்படுத்தக் கூடிய ஏனைய வழிமுறைகள்) அமைக்க வேண்டும். இதனூடாக கன மழைக்காலத்தில் சிறுவர்கள் அல்லது ஏனையோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும்.
எங்களுடைய பிரதேசங்களில் வருடம் தோறும் இந்த வடகீழ்ப் பருவக்காற்று கால பகுதியில் அதிகளவிலான வளர்ப்பு கால்நடைகள் இறப்பதற்கான நிலைமைகள் காணப்படுகின்றன. எனவே அவற்றின் இறப்பைத் தடுக்கும் வகையில் அவற்றிற்கான பாதுகாப்பான தங்குமிடங்களை முற்கூட்டியே ஏற்பாடு செய்வதன் ஊடாக அல்லது அவற்றுக்கு ஏற்படக்கூடிய நோய்களையும் நாங்கள் தவிர்த்துக் கொள்ள முடியும்.
பாடசாலை மாணவர்களுக்கு கனமழை மற்றும் வெள்ளக் காலங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வினை உரிய தரப்புக்கள் ஏற்படுத்துவதன் மூலம் சில உயிரிழப்புக்களை தவிர்க்கலாம்.
வழமை போன்று இம்முறையும் வடகீழ்ப் பருவக்காற்று காலப்பகுதியில் இடி மின்னல் நிகழ்வுகளுக்கு வாய்ப்பிருப்பதனால் மக்கள் அது தொடர்பாக விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். மழை நாட்களில் மழைக்காக எக்காரணம் கொண்டும் மரங்களின் கீழ் ஒதுங்குவதனைத் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
பொதுவாக விவசாயிகளை பொறுத்த வரையிலும் காலபோக நெற் செய்கைக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளின் பொழுது இடிமின்னலோடு கூடிய மழை நாட்களிலும் அவர்கள் தங்களுடைய நிலத்தை தயார்படுத்தும் வேலைகளில் ஈடுபடுவது வழமை. இதன்போது கிடைக்கின்ற இடியுடன் கூடிய மழை அவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதுண்டு. கடந்த 10 ஆண்டு கால தரவுகளின் அடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒவ்வொரு ஆண்டும் வடகீழ்ப் பருவக்காற்று காலப் பகுதியில் 10 க்கு மேற்பட்ட இறப்புக்கள் இடி மின்னல் நிகழ்வுகள் மூலம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே விவசாயிகளும் பொதுமக்களும் இடி மின்னல் நிகழ்வு தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியமாகும்.
இது ஒரு நீண்ட காலம் முன்னறிவிப்பு என்பதனால் இதில் சில மாற்றங்கள் நிகழலாம் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.
அதேவேளை தற்பொழுது வடக்கு, வடமேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளது. இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் ஒரு சில பகுதிகளுக்கு இன்று முதல்( 03.09.2025) எதிர்வரும் 07.09.2025 வரை அவ்வப்போதும் மிதமான மழை கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
–
Related posts:
|
|