“லஞ்சீட்” பாவனை – சுகாதாரமின்றி உணவு விற்பனை – உணவு நிலையத்துக்கு ஓர் இலட்சம் தண்டம் விதித்த பரு. நீதிமன்றம்!

Friday, May 8th, 2026

பருத்தித்துறை நகர சபையின் தடையை மீறி உணவுப் பொதியிடலுக்கு ‘லஞ்ச் சீட்’ பயன்படுத்திய மற்றும் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவு நிலையத்துக்குப் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்துள்ளது.

பருத்தித்துறை நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில், வீடொன்றில் அனுமதியின்றி உணவு கையாளும் நிலையம் இயங்குவதாகவும், அங்கு சட்டவிரோதமாக லஞ்ச் சீட் பயன்படுத்தப்படுவதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஸுக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.

இதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சோதனையின் போது பின்வரும் சட்டவிரோதச் செயல்கள் உறுதி செய்யப்பட்டன.

குறிப்பாக நகர சபையின் அனுமதி மற்றும் உணவு வளவுப்பதிவு சான்றிதழ் இன்றி இயங்கியமை.

உணவு பொதியிடலுக்கு தடைசெய்யப்பட்ட ‘லஞ்ச் சீட்’ பயன்படுத்தியமை.

உணவுத் தயாரிப்புக்குப் பயன்படும் நீர் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்தத் தவறியமை.

பணியாளர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் இல்லாமை மற்றும் தனிநபர் சுகாதாரம் பேணப்படாமை.

சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பாதுகாப்பற்ற சூழலில் உணவு உற்பத்தி செய்தமை.

இது தொடர்பாக பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஸினால் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசாரணையின் போது, உரிமையாளர் தனது குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து, அவருக்குக் கடும் எச்சரிக்கை விடுத்த நீதிவான், ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்துத் தீர்ப்பளித்தார்.
000

Related posts: