யாழ் மாவட்டத்தில் பகுதியளவில் கடையடைப்பு – செய்வதறியாது தடுமாறிய மக்கள்!!

இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (17) காலைமுதல் மதியம்வரை கடையடைப்பு அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த கடையடைப்பானது பல இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டாலும் சில இடங்களில் இயல்பு நிலையில் இருந்ததால் மக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் குழப்ப நிலைக்குள் உள்ளாகினர்
இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த ஹர்த்தாலுக்கு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் வணிக பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு வழங்குகின்றனர்.
முழுமையான கடையடைப்பாக இல்லாதவிடத்தும் தமிழரசுக கட்சியின் ஆதரவு தளத்திலுள்ளவர்கள் தமது கடைகளை பூட்டி கடையடைப்புக்க ஆதரவை வழங்கியுள்ளனர்.
குறிப்பாக யாழ்ப்பாண நகரப்பகுதி மற்றும் மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் வியாபார நிலையங்கள், பொதுச் சந்தைகள் என்பன திறக்கப்படாதிருந்தன.
ஆனாலும் சிலரது அழுத்தம் காரணமாக பொலிசாரின் தலையீட்டை அடுத்து சந்தைகள் திறக்கப்பட்டன. ஆனாலும் நெல்லியடி, சாவகச்சேரி, வேலணை, நல்லூர், சங்கானை, மானிப்பாய், உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களில் அதிகளவான கடைகள் பூட்டப்பட்டு கடையடைப்புக்கு ஆதரவு வழங்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை போக்குவரத்து சேவைகள் வழமை போன்று இயங்கியதுடன் அரச திணைக்களங்கள், பாடசாலைகள் என்பனவும் வழமை போன்று சேவைகளை முன்னெடுத்திருந்தன.
முன்பதாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் முழுமையாக முடங்க வேண்டும். அதனுடாக அரசாங்கத்துக்கு வலுவான செய்தியை எடுத்துரைக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுமக்களிடம் வலியுறுத்தியிருந்தது.
முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய இளைஞனின் சடலம் கடந்த 8 ஆம் திகதி முத்தையன்கட்டு குளத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டது. முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்களை இராணுவத்தினர் ஆகஸ்ட் 7 ஆம் திகதி முத்தையன்கட்டு முகாமிற்குள் அழைத்துச் சென்றதாகவும், ஒரு இளைஞர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.
முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடிகொண்டுள்ள இராணுவ பிரசன்னத்துக்கும், இளைஞனின் மரணத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தது. இந்த தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதிக்கு எழுத்துமூலமாக அறித்து கடந்த 15 ஆம் திகதி ஹர்த்தாலில் ஈடுபட அறிவித்திருந்தது.
இதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றையதினம் காலைமுதல் மதியம் வரை பூரண ஹர்த்தாலில் அமுல்படுத்தப்படுகிறது.பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஹர்த்தாலில் ஈடுபடுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி சகல தரப்பினரிடமும் வலியுறுத்துகிறது






000
Related posts:
|
|