யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தமிழ் பண்பாடு அனைத்துலக மாநாடு!

Saturday, June 28th, 2025


பன்நாட்டு பிரமுகர்கள் பங்கேற்கும் தமிழ் பண்பாடு அனைத்துலக மாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் யூலை 6 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம், நுவரெலியா, கொழும்பு ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதாக குறித்த மாநாட்டின் இணைப்பாளரும், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் க.பாஸ்கரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக மையத்தில் இன்று (28) ஊடக சந்திப்பை முன்னெடுத்து இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில் –

குறித்த மாநாட்டின் ஆரம்ப விழா நாளைமறுதினம் 30 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது.

இதில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சற்குணராசா, கௌரவ விருந்தினராக இந்திய துணைத்தூதுவர் எஸ். சிறி சாய் முரளி, வடமாகாண பிரதம செயலாளர் தனுசா முருகேசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறித்த நிகழ்வில் சாதனையாளர் விருது வழங்கல், நூல் வெளியீடு, கருத்தரங்கு நிகழ்வுகள், கலைநிகழ்ச்சிகள் என்பனவும் இடம்பெறவுள்ளன.

மாநாட்டுக்கான ஏற்பாடுகளை யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறையுடன் இணைந்து தஞ்சாவூர் அனைத்துலக பண்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு திருநெறி தமிழ் சைவசமய பாதுகாப்புப் பேரவை, இலண்டன் தமிழ் கல்வியகம், இலண்டன் உலகச் செம்மொழித்தமிழ் சங்கம், பிரான்ஸ் இந்திய வம்சாவளி மக்களுக்கான அமைப்பு ஆகியன ஒன்றுசேர்ந்து ஏற்பாடு செய்துள்ளன.

குறித்த நிகழ்வில் சுவிட்சர்லாந்து, கனடா, இங்கிலாந்து, நோர்வே, ஜேர்மனி, பிரான்ஸ் மலேசியா, சிங்கப்பூர், ரீயூனியன் தீவுகள், தென்ஆபிரிக்கா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள்  பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை ஜுலை 2 ஆம் திகதி நுவரெலியா மாவட்ட செயலக  மண்டபத்திலும் 06 ஆம் திகதி கொழும்பு மயூரபதி ஸ்ரீபத்ரகாளி அம்மன் ஆலய பண்பாட்டு கலையரங்கிலும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts: