யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் டெங்கு தொற்று – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரலிக்கை!

Wednesday, January 1st, 2025

யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ். மாவட்ட டெங்கு நோய் தாக்கம் நவம்பர் மாதம்முதல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. நவம்பர் மாதத்திலே 134 நோயாளர்களும் டிசம்பர் மாதத்திலே 241 நோயாளர்களும் இனங்காணப்பட்டிருந்தார்கள்.

டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்தின் பின்னர் டெங்கு நோயின் தாக்கம் தீவிரமாக அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றது. டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி 18 நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தார்கள். அதேபோன்று 26, 27 ஆம் திகதி அதிகளவு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தார்கள்.

எனவே, திடீரென அதிகரித்த அதிகரிப்பாக இது காணப்பட்டது. அதற்கு பின்னர் 28ஆம் திகதி 8 நோயாளர்களும் 29 ஆம் திகதி 12 நோயாளர்களும் இனங்காணப்பட்டிருந்தார்கள்.

ஆகையால், இப்படியான சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டால் ஜனவரி மாதத்தில் அதிகளவு டெங்கு பரம்பல் ஏற்படலாம். டெங்கு இறப்புக்கள் ஏற்படவும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

மேலும், எங்கள் பூச்சியியல் ஆய்வுகளை அவதானிக்கின்ற பொழுது டெங்கு நோயை பரப்புகின்ற நுளம்பின் செறிவு யாழ். மாவட்டத்தில் அதிகரித்து செல்வதனை அவதானிக்க முடிகின்றது.

யாழ்ப்பாணம் மாவட்டத்திலே 2024 ஆம் ஆண்டில் 5890 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரு இறப்பு ஜனவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெங்கு நோய் கட்டுப்பாடுகளை நாம் தீவிரபடுத்த வேண்டிய சூழல் உள்ளது. அந்தவகையில் பிரதம செயலாளர் தலைமையில் விசேட டெங்கு தடுப்பு கூட்டம் இடம்பெற்றது.

அதற்கு பின்னர் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஒலிபெருக்கி பிரசாரத்தினை யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் மேற்கொண்டோம்.

உள்ளூராட்சிமன்ற உதவியோடு கொள்கலன்களை அகற்றும் செயற்திட்டத்தினை முன்னெடுத்தோம். இதற்கு மேலதிகமாக விசேட நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் புகையூட்டும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கபட்டு வருகின்றன.

அத்துடன், பூச்சியியல் ஆய்வு நடவடிக்கைகளின் உதவிகளுக்காக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பணியாளர்களும் இணைந்துள்ளார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: