முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட சுமந்திரனுக்கு விருப்பமாம் – தமிழரசு கட்சியின் முடிவுக்கும் கட்டுப்படுவாராம் என தெரிவிப்பு!.

Sunday, August 3rd, 2025


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (ஆகஸ்ட் 2) நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) அரசியல் குழு கூட்டத்திற்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசிய சுமந்திரன், தனது விருப்பத்தை கட்சிக்கு முறையாக தெரிவிப்பேன் என்றும், ஆனால் தனது வேட்புமனுவை அங்கீகரிப்பதோ அல்லது நிராகரிப்பதோ கட்சியின் முடிவைப் பொறுத்தது என்றும் வலியுறுத்தினார்.

தன்னை விட பொருத்தமான ஒரு வேட்பாளரை முதலமைச்சர் பதவிக்கு கட்சி அடையாளம் கண்டால், கட்சியின் முடிவுக்கு தான் முழுமையாக கட்டுப்படுவேன் என்றும், அந்த நபருக்கு ஆதரவளிப்பேன் என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

2010 ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குள் நுழைந்த சுமந்திரன், பின்னர் 2015 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 58,043 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். எனினும், 2020 தேர்தலில் அவரது வாக்கு எண்ணிக்கை 27,834 ஆக குறைந்தபோதிலும், அவர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். 2024 பொதுத் தேர்தலில் அவர் 15,039 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார், இது அவரது அரசியல் வாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவாக கருதப்படுகிறது.

Related posts: