பறிக்கப்பட்டது காண்டீபனின் வவுனியா மாநகரசபை முதல்வர் பதவி – வெளியானது வர்த்தமானி!
Wednesday, June 24th, 2026
……
வவுனியா மாநகரசபை முதல்வரான சுந்தரலிங்கம் காண்டீபன் வவுனியா மாநகரசபை மேயர் பதவியிலிருந்தும், மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் ஆளுநருக்கு உரிய அதிகாரங்களை பயன்படுத்தி நீக்கப்படுகிறார் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பில் மேலும் – தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –
1947ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றங்கள் கட்டளைச் சட்டத்தின் (Municipal Councils Ordinance) 277 ஆம் பிரிவும், 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபைகள் (தொடர்புடைய ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவும் இணைந்து வழங்கியுள்ள அதிகாரங்களின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
வடக்கு மாகாண ஆளுநரான நாகலிங்கம் வேதநாயகன், மேற்கூறிய சட்டங்களின் கீழ் எனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், தனிநபர் விசாரணைக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆழமாக ஆராய்ந்து, அதனைப் பரிசீலித்ததன் பின்னர் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன்.
இதற்காக, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கே. கந்தையா அரியநாயகம் அவர்களை ஆணையாளராக நியமித்து, வவுனியா மாநகரசபை தொடர்பான நடவடிக்கைகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு 277(1A) பிரிவின் கீழ் பணித்திருந்தேன்.
அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், வவுனியா மாநகரசபை முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் , உள்ளூராட்சி மன்றங்கள் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 576) பிரிவு 277(1) இன் (a) மற்றும் (d) உபபிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின் படி மேயராகத் தொடரத் தகுதியற்றவர் என நான் திருப்தியடைந்துள்ளேன்.
எனவே, 1947 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றங்கள் கட்டளைச் சட்டத்தின் 277(1) பிரிவும், 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபைகள் (தொடர்புடைய ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவும் வழங்கியுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், 2026 ஜூன் 24 முதல் அமலுக்கு வரும் வகையில் திரு. சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் வவுனியா மாநகரசபை மேயர் பதவியிலிருந்தும், மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படுகிறார் என அறிவிக்கப்படுகிறது.
000
Related posts:
|
|
|


