பரீட்சை எழுதிய மாணவர்கள் RTI ஊடகாவிடைத்தாள்ககை பெற்றுக்கொள்ள உரிமை உண்டு – மேன்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்று தீர்பு!
Tuesday, May 12th, 2026
பரீட்சையெழுதிய மாணவர்கள் தமது விடைத்தாள்கள் மற்றும் புள்ளிகளைப் பெற்றுக்கொள்வதற்கு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிமை உண்டு என மேன்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
அத்துடன் பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் விடைத்தாள்களை வழங்க மறுத்து, இலங்கை திறந்த பல்கலைக்கழகம் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை போட்டிப் பரீட்சையில் தோற்றிய தனது மகளின் விடைத்தாள்கள் மற்றும் புள்ளிகளை வழங்குமாறு ஆர்.ஏ.ஜனக ரோஷான் ரணசிங்க என்பவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
பரீட்சை நடைமுறைகளின் இரகசியத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை பாதிக்கப்படும் எனக் கூறி பல்கலைக்கழகம் இந்தத் தகவலை வழங்க மறுத்தது.
எனினும், தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு விடைத்தாள்களை வழங்குமாறு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்தே பல்கலைக்கழகம் நீதிமன்றத்தை நாடியிருந்தது.
நீதிபதிகள் ஆர்.குருசிங்க மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோரைக் கொண்ட அமர்வு கடந்த 8 ஆம் திகதி அன்று இந்தத் தீர்ப்பை வழங்கியது.
குறித்த தீர்ப்பில் ஒரு மாணவர் தானாக எழுதிய விடைத்தாளை அவரே பார்ப்பதற்கும், அதற்கு எவ்வாறு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை அறிந்துகொள்வதற்கும் எவ்வித தடையும் இருக்க முடியாது.
“உயர் கல்வி நிறுவனங்கள் தகவல் ஒளிவுமறைவு விளையாட்டுகளில் ஈடுபட முடியாது” எனத் தெரிவித்த நீதிபதிகள், பொது நிறுவனங்களில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் மிக அவசியம் என வலியுறுத்தினர்.
பல்கலைக்கழகங்களின் உள்விதிமுறைகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை விட மேலானவை அல்ல. ஏதேனும் முரண்பாடுகள் ஏற்படும் போது தகவல் அறியும் உரிமைச் சட்டமே மேலோங்கும்.
அரசியலமைப்பின் 14ஏ உறுப்புரை மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மதிப்பீடு செய்தவர்களின் அடையாளங்களை இரகசியமாகப் பேணிக்கொண்டு, மாணவர்களின் விடைத்தாள்களை மீளாய்வு செய்ய அனுமதிக்கலாம் என இந்திய மற்றும் இலங்கை முன்னுதாரணத் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், பல்கலைக்கழகத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது.
இந்தத் தீர்ப்பானது இலங்கையின் கல்வித் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
Related posts:
|
|
|


