கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத இறைச்சி விற்பனை அதிகரிப்பு: பொதுமக்கள் குற்றச்சாட்டு !

Saturday, November 11th, 2017
 
கடந்த மூன்று வருடங்களாக யாழ். சாவகச்சேரிப் பிரதேச சபையின் கொடிகாமம் பொதுச்சந்தையிலுள்ள இறைச்சிக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.  இதன் காரணமாக, கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத இறைச்சி விற்பனை அதிகரித்துள்ளதாகவும், இறைச்சியைக் கொள்வனவு செய்வதற்கு சாவகச்சேரி மற்றும் பளைப் பகுதிகளுக்கே செல்ல வேண்டியுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.
நீண்டகாலமாக இறைச்சிக் கடைகளைக் குத்தகைக்கு நடாத்தி வருபவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
கேள்வி கோரலின் போது புதிதாக வருபவர்கள் மற்றும் அதிக தொகைக்குக் கடைகளைக் குத்தகைக்குப் பெற்றுக்கொள்பவர்கள் நஷ்டம் காரணமாக தொடந்து கடைகளை நடத்த முடியாமல் மூடிவிடுகின்றனர்.  இதனால், நியாயமான தொகைக்கு வழமையாக நடத்திய எமக்கு குத்தகைக்கு வழங்குமாறு பிரதேச சபையிடம் கோரினோம்.0
அதுமட்டுமல்லாமல் உள்ளூராட்சி ஆணையாளருக்கும் இது தொடர்பாகத் தெரியப்படுத்தியுள்ளோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சாவகச்சேரிப்  பிரதேச சபையின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடம் வினாவிய போது, 
வருடாந்தக் குத்தகைக்குக்  கேள்வி கோரல் அடிப்படையில் இறைச்சிக்கடைகள் வழங்கப்படுகின்ற போதும் அதனக்  குத்தகைக்குப் பெற்றுக் கொள்பவர்கள் ஓரிரு மாதங்களில் கடையை நடத்த முடியாததால் ஒப்பந்தங்களிலிருந்து விலகிவிடுகின்றனர். இதனால், மீள் கேள்வி கோரல் விடப்படுகின்ற போது யாரும் கடையை எடுக்க முன்வராத காரணத்தால் கடைகள் மூடப்பட்டுள்ளன எனத் தெரிவித்தனர்.
இதேவேளை, பிரதேச சபையின் ஆடு, மாடு, மற்றும் கோழி இறைச்சிக்கடைகள்  மூடப்பட்டிருப்பதால் பொதுமக்கள் பாதிப்படைவது மட்டுமன்றிப் பிரதேச சபைக்கான வருமானமும் இழக்கப்படுகின்றது. மூன்று கடைகளும் மூடப்பட்டிருப்பதால் வருடமொன்றுக்குச் சுமார் மூன்று மில்லியன் ரூபா வருமானத்தைச்  சாவகச்சேரி பிரதேச சபை இழக்கின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: