நாடு முழுவதும் 23,000 தாதியர்களுக்கான வெற்றிடம் –  ஐக்கிய தாதியர் சேவை சங்கம்!

Monday, June 22nd, 2026

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சுமார் 23,000 தாதியர்களுக்கான வெற்றிடம் நிலவுவதனால், தாதியர் குழாம் கடுமையான வேலைப்பளு மற்றும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய தாதியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் எந்தவித சாதகமான நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறியுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் தென்னே ஞானானந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய தென்னே ஞானானந்த தேரர் பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டார்.

தற்போதைய மருத்துவமனைக் கட்டமைப்பிற்குள் சுமார் 23,000 தாதியர்கள் மற்றும் சுமார் 14,000 கனிஷ்ட பணியாளர்கள் எனப் பாரிய வெற்றிடங்கள் காணப்படுகின்றது.

இந்த நிலைமையின் காரணமாக, இரண்டு தாதியர்கள் செய்ய வேண்டிய வேலைகளை ஒரு தாதி மட்டுமே செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சில சந்தர்ப்பங்களில் தாதியர்கள் தொடர்ச்சியாகப் பல நாட்கள் கடமையாற்ற வேண்டியுள்ளதால், அவர்களால் தாங்க முடியாத வேலைப்பளு உருவாகியுள்ளது.

அண்மையில் கிண்ணியா மருத்துவமனையில் இடம்பெற்ற சம்பவம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு இதுவே அடிப்படைக் காரணமாகும்.

இந்தத் தாதியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாகக் குறுகிய, இடைக்கால மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்கள் வகுக்கப்படாவிட்டால், ஒட்டுமொத்த மருத்துவமனைக் கட்டமைப்பும் முற்றாக வீழ்ச்சியடையும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஐக்கிய தாதியர் சேவை சங்கத்தின் செயலாளர் நிசான்சலா பெர்னாண்டோ, தாதியர்கள் எதிர்நோக்கும் உளவியல் மற்றும் பொருளாதார ரீதியான சவால்களைத் தெளிவுபடுத்தினார்.

தாதியர் சேவையில் நிலவும் தீர்க்கப்படாத பிரச்சினைகள், தாங்க முடியாத மன அழுத்தம் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகத் தாதியர்கள் தொழிலை விட்டு விலகி வெளிநாடுகளுக்குச் செல்வது சடுதியாக அதிகரித்துள்ளது.

பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் நோயாளர் பராமரிப்புச் சேவைகளை ஒருபோதும் நிறுத்த முடியாது என்பதால், தற்போதுள்ள தாதியர்கள் கடுமையான உளவியல் மற்றும் உடல் ரீதியான அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

“தன்னுடன் பணியாற்றுபவர்களைப் பார்க்கவோ அல்லது தங்களைப்பற்றிக் கவனித்துக்கொள்ளவோ தாதியர்களுக்கு நேரம் இல்லை.

நீண்டகாலமாக இந்த மன மற்றும் உடல் அழுத்தங்களைத் தாங்கிக்கொள்வதன் மூலம், சில தாதியர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்குக் கூட தள்ளப்பட்டுள்ளனர்” என அவர் மேலும் வேதனையுடன் சுட்டிக்காட்டினார்.

நிலைமை மேலும் மோசமடைந்து தாங்க முடியாத மட்டத்தை எட்டுவதற்கு முன்னர், அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய தாதியர் சேவை சங்கம் வலியுறுத்தியுள்ளது

Related posts: