நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது கொடுப்பனவே தவிர ஊதியம் அல்ல – நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர சுட்டிக்காட்டு!

Wednesday, November 20th, 2024

நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு என இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

பிரதான சிங்கள ஊடகமொன்றின் நிகழ்ச்சி ஒன்றில் இணைந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சுமார் 54,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர் –

அதற்கு மேலதிகமாக, வருகை கொடுப்பனவாக நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறும் நாட்களில் 2,500 ரூபாவும் மற்றும் கூட்டத்தொடர் இல்லாத நாட்களில் குழுக்களில் கலந்துகொள்வதற்கு 2,500 ரூபாவும் உதவித்தொகையாக வழங்கப்படும்.

தூரத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படும் நிலையில் அது சூத்திரத்தின்படி கணக்கிடப்படும்.

அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் இருந்து 40 கிலோமீட்டருக்குள் வீடு இல்லாதவர்கள் விண்ணப்பித்து மாதிவெலயில் அமைந்துள்ள எம்பி குடியிருப்புக்களை பெற்றுக் கொள்ளலாம்.

மாதிவெலயில் இவ்வாறான 108 வீடுகள் உள்ளன. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க முதலில் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் வரிசையில் வீடுகள் வழங்கப்படும்.

வீட்டு வாடகையாக 2,000 ரூபாய் செலுத்தப்படும். மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை தொடர்புபட்ட உறுப்பினர் செலுத்த வேண்டும்.” என கூறினார்.

மேலும், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மருத்துவ வசதிகளை பெற்று கொடுப்பதன் மூலம் கொடுப்பனவுகளில் இருந்து தொகையை குறைக்க நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற அலுவல்களைகள் அமைச்சு இணைந்து வசதிகளை வழங்கியுள்ளதாக தெரிவித்த செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட ஊழியர்களுக்கு தேவையான கொடுப்பனவுகளையும் குறித்த அமைச்சு ஏற்கும் எனவும் வெளிப்படுத்தினார்

000

Related posts: