நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய உயர்திருவிழா தொடர்பாக மாவட்ட செயலகத்தின் அறிவிப்பு!

Thursday, June 26th, 2025

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உயர்திருவிழாவானது எதிர்வரும் 26.06.2025 ஆந் திகதி தொடக்கம் 11.07.2025 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இவ் உயர் திருவிழா தொடர்பாக அரசாங்க அதிபர் தலைமையில் 17.06.2025 ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முன்னாயத்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்ட பின்வரும் விடயங்களை யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பொதுமக்களின் நலனுக்காக வெளியிட்டுள்ளார்.

குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து படகுச் சேவையானது 26.06.2025 ஆம் திகதி தொடக்கம் 11.07.2025 ஆம் திகதி வரை மு.ப 6.00 மணி தொடக்கம் பி.ப 6.00 மணி வரை அரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை என்ற அடிப்படையில் சேவையில் ஈடுபடும்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தானது யாழ்ப்பாண பேருந்து தரிப்பிடத்திலிருந்து மு.ப 5.30 மணி தொடக்கம் இறுதி படகுச் சேவைக்கமைய சேவையில் ஈடுபடுவதுடன், அரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை என்ற அடிப்படையிலும் சேவையில் ஈடுபடும்.

திருவிழா காலங்களில் பேருந்தானது மு.ப 4.30 மணிக்கு யாழ்ப்பாண பேருந்து தரிப்பிடத்திலிருந்து புறப்படும். அத்துடன் இரவு பேருந்து சேவையானது படகுச் சேவைக்கமைய சேவையில் ஈடுபடும்.

குறிகட்டுவான் இறங்குதுறை பகுதியிலும் அதற்கு முன்னான வீதி ஓரங்களிலும் வாகனங்கள் தரிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் அடியார்கள் மற்றும் பொதுமக்களை இறக்கிவிட்டு வாகனங்களுக்கென ஒதுக்கப்பட்ட தரிப்பிடத்தில் தரிக்கப்படவேண்டும். இந் நடைமுறையினை கடைப்பிடிக்காதவர்கள் மீது பொலிஸாரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

24.06.2025 ஆம் திகதி தொடக்கம் 12.07.2025 ஆம் திகதி வரை குறிகட்டுவானிலிருந்து நயினாதீவிற்கு கட்டட பொருட்கள் வங்களாவடி இறங்குதுறைக்கு கொண்டு செல்லப்படலாம். குறிகட்டுவானிலிருந்து பி.ப 2.00 மணிக்கு பின்னர் கட்டடப்பொருட்களை ஏற்றிச்செல்ல அனுமதி வழங்கப்படுவதுடன் இறுதி 04 திருவிழா காலங்களில் கட்டடப்பொருட்கள் எடுத்துச்செல்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அடியார்களுக்கான மதிய மற்றும் இரவு உணவானது அமுதசுரபி அன்னதான சபையினரால் திருவிழா நாட்களில் வழங்கப்படும்.

பொலிஸார் சீருடை மற்றும் சிவில் உடைகளில் கடமையில் ஈடுபடுவார்கள். மேலும் பொதுமக்கள், அடியார்கள் தங்களது பெறுமதிமிக்க பொருட்களுக்கு அவர்களே பொறுப்பாளிகள் ஆவர்.

ஆலய வளாகத்தில் தண்ணீர்ப்பந்தல் அமைக்க விரும்பும் அடியார்கள் மற்றும் பொதுநலன்விரும்பிகள் பொது சுகாதார பரிசோதகரை தொடர்புகொண்டு அனுமதியினைப் பெற்றுக்கொள்ளவும்.

திருவிழா காலங்களில் ஆலய வளாகத்தில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையினை முற்றாக தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

ஆலயத்திற்கு முன்புறமாக உள்ள தற்காலிக கடைகள் அகற்றப்பட்டு பொருத்தமான இட ஒதுக்கீடு செய்யப்படும்

000

Related posts: