தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார் விஜய்!

Sunday, May 10th, 2026

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்
தமிழக புதிய முதல்வராக பதவியேற்றார் .

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா வந்தே மாதரம் பாடல் இசைக்க ஆரம்பமானது.

தேசிய கீதம் மற்றும், தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

இதனையடுத்து தமிழகத்தின் 18 ஆவது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என்று விஜய் உறுதிமொழி கூறியபோது அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த தவெக தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.

இந்த நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஆளுநர் தமிழிசை, கூட்டணி கட்சித் தலைவர்கள், விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், நடிகை த்ரிஷா, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய்யின் நண்பர்கள், உறவினர்கள், திரையுலக, அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், 10 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், அவருக்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் கட்சிகள் ஆதரவளித்தன.

விசிக நேற்று மாலை ஆதரவுக் கடிதத்தை வழங்கியது. தொடர்ந்து ஐயூஎம்எல் கட்சியும், கடைசி நேரத்தில் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து கடிதம் வழங்கியது.

அதன்படி, தவெகவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை விட அதிகமாக ஆதரவு கிடைத்தது.

நேற்று மாலை 6.15 மணிக்கு விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, விஜய் ஆளுநர் மாளிகைக்கு வந்தார்.

ஏற்கெனவே அங்கு வந்து காத்திருந்த காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் சென்று ஆளுநரை விஜய் சந்தித்தார். அப்போது, 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் வழங்கினார். 

தொடர்ந்து, அரசியலமைப்பு சட்டப் பிரிவு 164-ன் கீழ் விஜய்யை முதல்வராக நியமனம் செய்து அதற்கான ஆணையை ஆளுநர் அர்லேகர் வழங்கினார். ஆட்சி அமைக்கவும் விஜய்க்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது

Related posts: