ஜனாதிபதி அனுராவுடனான எமது சந்திப்பு பலருக்கு புளியை கரைத்துள்ளது –  முன்னாள் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, October 27th, 2024

ஜனாதிபதி அனுரவுடனான எனது சந்திப்பு பலருக்கு புளியை கரைத்திருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி அநுரவின்  அணுகுமுறையிலும் செயற்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின்  பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் –

தேசிய நல்லிணக்கம் ஊடாகவே எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

புதிய நாடாளுமன்றத்தில் கூடிய ஆசனங்களை பெறுவதன் மூலம் ஆட்சி அமைப்பவர்களுடன் நாங்களும் பங்கு கொள்வதன் ஊடாக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது அரசியல் இலக்கை அடைவதற்காக அத்திசையை நோக்கி பயணிக்கலாம் என்ற வகையில் பத்து மாவட்டங்களில் இம்முறை போட்டியிடுகின்றோம்.

இதனூடாக நான்கு அல்லது ஐந்து ஆசனங்களை பெறுவது எமது இலக்காக உள்ளது.

இதேவேளை இதுவரையான காலத்தில் நான் எட்டு ஜனாதிபதிகளை சந்தித்துள்ளேன். ஆனால் இவர் என்னைவிட வயதில் இளைமையானவர்.

அவரது அணுகுமுறையிலும் செயற்பாட்டிலும் நல்லதொரு மாற்றம் தெரிகிறது. எனினும் அதனைப் பொறுத்திருந்து தான் நாங்கள் பார்க்கவேண்டும்.

நாம் வடக்கு – கிழக்கு தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினையை பிரதானமாக முன் வைத்துள்ளோம்.

இந்த தேர்தலில் எமது கட்சி அதிக ஆசனங்களை பெறுவதற்கான வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்திருந்தார்.

சிலவேளை இந்தசந்திப்பு பலருக்கு புளியை கரைத்திருக்கலாம். நாங்கள் இரு தரப்புமே ஆயுத போராட்டத்தின் பின்னர் நாடாளுமன்றம் சென்றவர்கள்.

அந்தவகையில் ஒரு புரிந்துணர்வு இரு தரப்பிற்கும் உள்ளது. அவர்களது ஆட்சியில் கலந்து கொள்ள போகிறோமா என்ற விடயத்தினை தேர்தலின் பின்னரே தீர்மானிக்க முடியும்.

இதேவேளை, எல்பிட்டியவில் தேசிய மக்கள் சக்தி 15 ஆசனங்களும், எதிர்த்தரப்புக்கள் 15 ஆசனங்களையும் பெற்றுள்ளது.

அவர்கள் நாடாளுமன்றிலும் பெரும்பான்மை எடுப்பதாக சொல்கிறார்கள். அதனை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலிலும் கணிப்புகள் எல்லாம் பிழைத்து விட்டது. எனவே பொறுத்திருப்போம் எனவும் அவர் தெரிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

0000

Related posts:

நீதிக்கு தலை வணங்குவேன் : அநீதிக்கு அடிபணியேன் - கடற்றொழிலாளர்க்கு தீங்கிழைக்கவும் மாட்டேன் - அமைச்ச...
அரியாலையில் சட்டவிரோத மணல் அகழ்வு கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்ப...
 நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்பை மதிக்கின்றேன் - ஜெய்சங்கரிடம் தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி ரணில்!