சட்டவிரோத சொத்து குவிப்பு  – நாடாளுமன்ற உறுப்பினர்  ஸ்ரீதரனுக்கு எதிராகநிதிக் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு!

Friday, July 25th, 2025

சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனுக்கு எதிராக காவல்துறை தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவில் நேற்று முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.  

சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் இந்த முறைபாட்டை பதிவு செய்துள்ளார்.  2010 ஆம் ஆண்டு பாடசாலை அதிபராக கடமை புரிந்த எஸ்.ஸ்ரீதரன், அரசியலில் பிரவேசித்து, நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார்.

இந்த நிலையில் திடீரென கோடிக்கணக்கில் எவ்வாறு சொத்துக்களை சம்பாதித்தார் என்பது தொடர்பில் எஸ் ஸ்ரீதரன் தெளிவுப்படுத்த வேண்டும் என கோரி, அவருக்கு எதிராக இந்த முறைபாடு செய்யப்பட்டுள்ளது.  

பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான கிளிநொச்சியில் அதிபராக பணியாற்றிய அவர், திடீரென கோடிக்கணக்கில் சொத்துக்களை சம்பாதித்ததில் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டதாக சிவில் சமூக செயற்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.  

நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரனுடைய மனைவியின் பெயரில் குளிர்களி விற்பனை நிலையங்கள் இரண்டும், அவருடைய மகளுடைய பெயரில் சிறப்பு அங்காடிகள் இரண்டும் இயங்குவதாகவும் தமது தேடல்களில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.  

அத்துடன், கடந்த ஆட்சியின் போது வழங்கப்பட்ட மதுபானசாலை உரிமங்கள் இரண்டும் எஸ்.ஸ்ரீதரனின் பெயரில் இருப்பதாகவும் முறைப்பாட்டாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில், குறித்த சொத்துக்களை சம்பாதித்த முறை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் முறைப்பாட்டாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த முறைபாடு தொடர்பில் எமது செய்திச் சேவை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனை தொடர்பு கொள்ள பல தடவைகள் முயற்சித்த போதும், அது பயனளிக்கவில்லை.

000

Related posts: