கியூபாவை சென்றடைந்த ரஷ்ய எண்ணெய்க் கப்பல் – அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்!
Monday, March 30th, 2026
…….
கியூபாவிற்கு அண்டை நாடுகள் எண்ணெய் வழங்குவதற்குத் தடை விதித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்போது ரஷ்யாவின் அதிரடி நகர்வைத் தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியுள்ளார்.
குறிப்பாக கியூபாவிற்கு எந்த நாடு உதவினாலும் தமக்குக் கவலையில்லை என அவர் தெரிவித்துள்ளமை அரசியல் வட்டாரங்களில் “பல்டி”யாகப் பார்க்கப்படுகிறது.
முன்பதாக அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் ‘Anatoly Kolodkin’ என்ற பிரம்மாண்ட எண்ணெய் கப்பல், சுமார் 650,000 முதல் 730,000 பீப்பாய் கச்சா எண்ணெயுடன் கியூபா கடற்பரப்பை அடைந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைப் பதவியிலிருந்து கவிழ்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, கியூபாவிற்கான எண்ணெய் விநியோகத்தை அமெரிக்கா முடக்கியது.
அத்துடன் கியூபாவிற்கு எண்ணெய் அனுப்பும் நாடுகள் மீது கடும் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்ததால், மெக்சிகோ போன்ற நாடுகளும் விநியோகத்தை நிறுத்தின. இதனால் கடந்த மூன்று மாதங்களாகக் கியூபா கடும் மின்வெட்டு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டில் தத்தளித்து வந்தது.
ரஷ்யா தனது கப்பலை அனுப்பியதைத் தொடர்ந்து, ட்ரம்ப் தனது முந்தைய கடுமையான எச்சரிக்கைகளில் இருந்து பின்வாங்கியுள்ளார்.
“ரஷ்யாவோ அல்லது வேறு எந்த நாடோ கியூபாவிற்கு உதவுவதில் தமக்கு இப்போது பிரச்சினை இல்லை. கியூபாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கம் விரைவில் தானாகவே வீழ்ச்சியடையும் என நான் கணித்துள்ளேன். எனவே இப்போது யார் உதவினாலும் கவலையில்லை” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்காவின் முழுக் கவனமும் ஈரான் மீதான போரில் இருப்பதால், கியூபா விவகாரத்தைத் தற்காலிகமாகத் தள்ளி வைப்பதாகத் தெரிகிறது.
ஈரான் விவகாரம் ஒரு முடிவுக்கு வந்ததும், கியூபா மீது அதிகக் கவனம் செலுத்தப் போவதாக ட்ரம்ப் மீண்டும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இருப்பினும், ரஷ்யாவின் இந்த உதவி கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்த கியூபாவிற்கு ஒரு முக்கிய “உயிர்நாடியாக” அமைந்துள்ளது.
000
Related posts:
|
|
|


