உள்ளூர் அதிகார சபை தேர்தல் – கட்சி ரீதியில் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரமுள்ளது – தேர்தல் ஆணையாளர் நாயகம்!  

Tuesday, July 1st, 2025

கட்சி ரீதியில் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டால், அதனுடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரமுள்ளது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

அத்துடன் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சுமார் 2600 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று  இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதித் தேர்தலில் சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத 13 வேட்பாளர்களுக்கு எதிராகவும்,  பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 1064 வேட்பாளர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 75000 க்கும் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் அவர்களில் 2600 க்கும் மேற்பட்டோர் தமது சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை. இவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தெரிவான உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிடுவது மாத்திரமே தேர்தல் ஆணைக்குழுவின் கடமையாகும். ஏனைய சபை நடவடிக்கைகளுக்கும் ஆணைக்குழுவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

அவை மாகாண ஆணையாளர்களுடன் தொடர்புடையவையாகும். உறுப்பினர்களது அரசியல் நடவடிக்கைகளிலும் தேர்தல் ஆணைக்குழு தலையிடாது.

எனினும் கட்சி ரீதியில் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டால், அதனுடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரமுள்ளது. என்றார்.

00

Related posts: