ஈ.பி.டி.பியின் மனித நேயத்தின் முதன்மை கை கொடுக்க யாழ் மாநகரின் பாதீட்டை வென்றது தமிழரசு!………
Friday, December 5th, 2025
தமிழரசுக் கட்சியின் தடையின்றிய சபை நடவடிக்கைகளுக்கு ஈ.பி.டி.பி.யின் மக்கள் நலன் மனித நேயத்துக்கு முதன்மை என்ற நிலைப்பாடு கை கொடுத்தமையால் யாழ் மாநகரின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு மேலதிக இரு வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளது.
யாழ் மாநகரின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடை நடைமுறையாக்குவதற்காக இன்றையதினம் (5) முதல்வர் மதிவதனியால் சபையில் குறித்த பாதீட்டின் வரைபு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இன்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பேரிடரால் உருவாகியுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு யாழ் மாநகரின் ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டுடன் இன்னும் பல நடைமுறையாக்கப்பட வேண்டிய விடையங்களைக் கூட இழுத்தடிப்பு செய்து வருவதாக உறுப்பினர்களால் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டு பாதீட்டின் மீது சபையில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
இதனால் யாழ் மாநகரின் பாதீடு தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
குறிப்பாக 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ் மாநகர சபையில் தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் கொண்டுள்ளன.
இன்நிலையில் இன்று ஆரம்பமான பாதீட்டு விவாதத்தின் போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் தமிழரசுக் கட்சி 19 ஆசனங்களுடன்னிருக்க,
மறுபுறம் ஈபிடிபியும் ஆட்சியாளர் மீது அதிகளவான குற்றச் சாட்டுக்களை சபையில் முன்வைத்து கடுமையாக விமர்சித்திருந்தது.
ஆனாலும் ஈ.பி.டி.பியின் இறுதி நிலைப்பாடு தெரியாத நிலையில் இருந்தது.
இதேநேரம் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஊர்காவற்றுறையில் தமது ஆட்சி முன்வைத்த பாதீடு தோல்வியடைந்த ஆதங்கத்தில் இருந்த சைக்கிள் கட்சி ஆகியன ஒன்றிணைந்து 21 ஆசனங்களுடனும் இருந்ததால் மாநாகரின் பாதீடு தோல்வியடையும் நிலை காணப்பட்டது.
ஆனாலும் ஒற்றுமை, ஐக்கியம் வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவரும் நிலை ஒருறம் இருக்க,
யாழ் மாநகரின் ஆட்சியாளர் மீது விமர்சனங்கள் ஆதங்கங்கள் இருந்தாலும்,
சபையில் முன்வைக்கப்பட்ட பாதீடுதான்,
“டித்வா” புயலின் விளைவால் ஏற்பட்டுள்ள இந்த பேரிடர் நேரத்தில் மக்களின் நலன்களை யாழ் மாநகரசபை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஒன்றாக இருக்கும் என்ற நோக்குடன் அதற்கு ஒத்திசைவை கொடுக்க வேண்டும் என்ற மனித நேய நோக்குடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவாக வாக்களித்ததால் யாழ் மாநகரின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு மேலதிக இரு வாக்குகளால் வெற்றிபெற்றது.
குறிப்பாக தமிழரசுக் கட்சி மற்றும் ஏற்கனவே ஆதரவைக் கொடுத்திருந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுடன் ஈ.பி.டி.பி க்கு பொது இணக்கப்பாடு இல்லாவிட்டாலும், ஈபிடிபியின் மனித நேயம் மற்றும் மக்கள் நலன் முதன்மை என்ற பெரும் புள்ளி இணைந்ததால் யாழ் மானகரின் பாதீட்டை ஆட்சியாளர்கள் தக்கவைத்துள்ளதாக சமூக ஆர்வலர்களும் புத்திஜீவிகளும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


